முத்தரப்பு டி20 போட்டி: கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி!
by எழில்இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மகளிர் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது.
கேன்பராவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. கேப்டன் நைட், 44 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் ராஜேஸ்வரி கெயக்வாட், ஷிகா பாண்டே, தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
ஷஃபாலி வர்மா, 30 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்திய வீராங்கனைகள் பந்துகளை வீணடிக்காமல் விளையாடியதால் இலக்கை அடைய வழி ஏற்பட்டது.
எனினும் கடைசி 3 ஓவர்களில் 26 ரன்கள் தேவை என்கிறபோது லேசாகப் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் களத்தில் இருந்ததால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள். தீப்தி சர்மாவும் அவருக்கு நல்ல இணையாக விளங்கினார். 19-வது ஓவரில் 11 ரன்கள் எடுத்ததால் கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கவனமாக கெளர் - சர்மா ஜோடி விளையாடியதால் பதற்றம் தவிர்க்கப்பட்டது. 4 பந்துகளில் 4 ரன்கள் என்கிற நிலையில் சிக்ஸர் அடித்து வெற்றி தேடித் தந்தார் ஹர்மன்ப்ரீத் கெளர்.
இந்திய அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வரும் ஞாயிறன்று ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இப்போட்டியின் இறுதிச்சுற்று பிப்ரவரி 12 அன்று நடைபெறவுள்ளது.