https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/8/original/Nirbhaya_case_convicts.jpg

நிர்பயா வழக்கு: நான்கு பேரில் மூவரை தூக்கிலிடலாம்- நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம்

by

புது தில்லி: ஒரு குற்றவாளியின் கருணை மனு நிலுவையில் இருப்பதால், அவரைத் தவிர்த்து மற்ற மூன்று குற்றவாளிகளை தூக்கிலிடலாம் என்று தில்லி நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம் கூறியுள்ளது.

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் சார்பில் வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.

அதே சமயம், பவன் குப்தா, வினய் குமார் ஷர்மா, அக்சய் குமார் ஆகியோர் சார்பில் தூக்கு தண்டனையை தள்ளிவைக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அப்போது, குற்றவாளி வினய் குமரின் கருணை மனு இன்னமும் நிலுவையில் இருப்பதால், அவரைத் தவிர்த்து மற்ற 3 குற்றவாளிகளையும் தூக்கிலிடலாம் என்று திகார் சிறை நிர்வாகம் கூறியது.

இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த வழக்குரைஞர் ஏ.பி. சிங், ஒரு குற்றவாளியின் மனு நிலுவையில் இருக்கும் போது மற்ற குற்றவாளிகளை தூக்கிலிட சட்டத்தில் வழியில்லை என்று வாதிட்டார்.

ஏற்கனவே, முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ஜனவரி 17ம் தேதி தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, நால்வரையும் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடுமாறு விசாரணை நீதிமன்றம், வாரண்ட் பிறப்பித்தது. முன்னதாக ஜனவரி 22ம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், வினய் மற்றும் அக்சய் குமாரின் மறுசீராய்வு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

பவன் மட்டுமே இதுவரை மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை. மறுசீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டால்தான், ஒரு குற்றவாளியால் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்ப முடியும்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!