கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுவது உறுதி! கருணா

by

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்துவது உறுதி என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - களுதாவளை, ஈஸ்வரன் ஆலய முன்றலில் நேற்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலாசார பிரிவின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதம மந்திரியுமான மகிந்த ராஜபக்சவை அவரது உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் மாலை 5.30 மணியளவில் அனைத்து கட்சிகள் குழுவாக சந்தித்திருந்தோம்.

அதிலே பல விடயங்கள் உரையாடப்பட்டது. அதிலே கல்முனை பிரதேச செயலகம் தொடர்பாக நான் அவரிடம் எடுத்துக் கூறியிருந்தேன். அதனை தரமுயர்த்தி தருவதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.

அளித்த வாக்குறுதிகளை மீறி செயற்படாத அவர் ஆணித்தனமாக அனைத்து கட்சிகள் மத்தியில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று காலை பொதுநிர்வாக உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் பிரதமரின் தகவல்களை கொடுத்து அதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

என்னை பொறுத்தஅளவில் இந்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் விரைவாக நடைபெறும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை கெடுத்தது மாத்திரமல்லாது. மேல் மாகாணத்தில் கொழுப்பையும் கெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அனந்தி சசிதரனும் ஒரு போராளியாக இருந்தவர் அவரும் தற்போது வெளியில் தான் இருக்கின்றார் என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும். கிட்டத்தட்ட 12 ஆயிரம் போராளிகள் இறுதி யுத்தத்தில் சரணடைந்தார்கள்.

அவர்கள் அனைவரது விடுதலையும் அன்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேசி புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தற்போது சிறையில் உள்ளவர்கள் அரசியல் கைதிகள் உண்மையிலே உண்மையான விடுதலைப் புலிகள் சிறையில் இல்லை. விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்தவர்களும், ஆதரவு அளித்தவர்களுமே சிறையில் இருக்கின்றனர்.

அவர்களையும் படிப்படியாக விடுவிக்க முதற்கட்ட நடவடிக்கைகள் நடைபெற்றிருக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்திருக்கிறார் என்பதை கூற விரும்புகின்றேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனை நாங்கள் ஒரு கருத்தாக கூட எடுப்பதில்லை. ஏனென்றால், அவரை ஒரு சிறந்த அரசியல்வாதியாக பார்ப்பதில்லை.

ஏனென்றால் அம்பாறை மாவட்டத்திற்கு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துக் கொடுக்கக் கூடிய வாய்ப்புகள் இருந்தும் இன்று அவர் அங்கு எதுவுமே செய்யவில்லை. மாறாக அங்கு அவர் ஒரு கீழ்த்தரமான அரசியலை செய்து வருகின்றார்.

அதாவது அங்குள்ள இளைஞர்கள் எடுக்கின்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள இளைஞர்களை திரட்டி மதுபானங்களை வாங்கிக்கொடுத்து ஒவ்வொரு நாளும் பாட்டுகள் வைத்து கீழ்த்தரமான நடவடிக்கையை செய்துகொண்டிருப்பது அனைத்து மக்களும் அவதானித்து கொண்டிருக்கிறார்கள்.

ஆதலால் அவரது கருத்துக்களை பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. எமது கட்சியின் செயற்பாடு அம்பாறை மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இன்று நாங்கள் என்று நாங்கள் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலை, கலாசார பிரிவினரும் இந்து குருமாரும் ஒன்றிணைந்து இந்த பொங்கல் விழாவை முன்னெடுத்து வருகின்றோம்.

எமது கலை, கலாசாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அழிந்துவரும் ஆலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒரு பிரிவைத் தொடங்கி அதன் ஊடாக எமது விழுமியங்களை காப்பதற்கான ஆரம்ப கட்டமாக இந்த பொங்கல் விழா இடம்பெற்றிருக்கிறது.

ஆகவே ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.