இன்று (ஜன.31) நடிகர் நாகேஷ் நினைவுதினம் : நடிப்பில் நவரசம் காட்டும் நகைச்சுவை நாயகர்
ஒரு ஒல்லியான தேகம்... சரசரவென ஓடி வரும். ஸ்பிரிங்கை சுண்டி விட்டது போல திரும்பும். வாயை திறந்தால் நாம் வாயை மூட முடியாது. சிரிப்பு வெடி சிதறும். காமெடி, குணச்சித்திரம், ஹீரோ, வில்லன்.... இப்படி எந்த ரோல் கிடைத்தாலும், நடிப்பில் பின்னி பெடலெடுப்பார். அவர்தான் நாகேஷ். இன்று அவரது நினைவுநாள். அவரைப்பற்றி தெரிந்து கொள்வோமா?
கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட கிருஷ்ணராவ் - ருக்மணிக்கு மகனாக, 1933, செப்.27ம் தேதி, திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பிறந்தவர் நாகேஷ் என்கிற செய்யூர் கிருஷ்ணா நாகேஷ்வரன். அப்பா ஸ்டேஷன் மாஸ்டர். சிறு வயதிலேயே நாடகம், நடிப்பின் மீதும் ஆர்வம் கொண்ட நாகேஷ், ‘கம்பராமாயணம்’ நாடகம் பார்ப்பதற்காகவும், அதில் சிறு ரோலிலாவது நடித்து விட வேண்டுமென்ற எண்ணத்தோடு தாராபுரத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பினார். நாடகத்தில் சிறு சிறு ரோலில் நடித்தாலும், நாகேஷ் வரும் காட்சிகளில் அரங்கில் சிரிப்பொலி சிதறுமாம். ஒரு நாடகத்தில் வயிற்றுவலிக்காரன் வேடத்தில் அவர் நடிப்பை பார்த்த எம்ஜிஆர், ஆச்சரியப்பட்டு அவரை பாராட்டினார். தனது நடிப்பால் பலரை கவர்ந்த நாகேஷ், 1958ம் ஆண்டு ‘மானமுள்ள மருதாரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 1961ம் ஆண்டு ‘தாயில்லா பிள்ளை’ என்ற படத்தில் நடித்தார்.
தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து மக்களை கவர்ந்தார். இவரின் நடிப்புக்கு மிகப்பெரிய விசிறியான பாலச்சந்தருக்க, இவரை கதாநாயகனாக நடிக்க வைத்தால் என்ன தோன்றியது. விளைவு... 1964ம் ஆண்டு வெளியான ‘சர்வர் சுந்தரம்’ படத்தில், கதாநாயகனாகவும் கலக்கினார். காமெடி, கதாநாயகன், குணச்சித்திர வேடம் என எது கொடுத்தாலும் அதில் தனது முத்திரையை பதிக்காமல் நாகேஷ் விடுவதில்லை. 1958ல் துவங்கிய அவரது திரைப்பயணம் ஆயிரம் படங்களை கடந்தும் தொடர்ந்தது.
திருவிளையாடல் தருமி வேடத்தை மறக்க முடியுமா? காதலிக்க நேரமில்லை படத்தில் டைரக்டர் ரோல், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என பல வேடங்களில் பின்னி எடுப்பார். மகளிர் மட்டும் படத்தில் பிணமாகவும் பிரமாதமாக நடித்திருப்பார். பிணமாக எப்படி நடிக்க முடியும் என்கிறீர்களா? அந்த படத்தை பாருங்கள்... அட.. ஆமாம்ல... என்பீர்கள். எம்ஜிஆர், கமல் நடித்த பல படங்களில் நாகேசை பார்க்க முடியும். குறிப்பாக, கமல் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வில்லனாக நடித்திருப்பார். ‘நம்மவர்’ படத்தில் மகள் பிணத்தின் அருகே நின்று கொண்டு அவர் நடிக்கும் காட்சி கண்களை குளமாக்கும். இவருடைய நடிப்புக்கு 1974ம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. ‘நம்மவர்’ படத்தில் நடித்ததற்காக துணை நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டது. இருந்தாலும், அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லையென்ற கருத்து பொதுவாக உள்ளது.
நாகேசின் தனித்துவமே அவரது டைமிங்தான். இன்று அவரது டைமிங் சென்சை எத்தனையோ பேர் பின்பற்றுகின்றனர். ஆனாலும், நாகேஷ் இன்றும் நம் மனதில் நிற்பதற்கு காரணமே அந்த தனித்துவம் அவருக்கு மட்டுமே கிரீடமாக விளங்கியது. வாழ்நாள் கடைசி வரை சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த ‘தென்னகத்து சாப்ளின்’ என அழைக்கப்பட்ட நாகேஷ், தனது 75வது வயதில் சென்னையில், ஜன.31, 2009ம் ஆண்டு உயிரிழந்தார்.