http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_849529445171357.jpg

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தனி மருத்துவமனை: தமிழக அரசுக்கு மருத்துவர்கள் வலியுறுத்தல்

சென்னை:  கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கென்று தனி மருத்துவமனையை ஒதுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் அறிகுறிகளோடு இருப்பவர்களுக்கு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டுகள் ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் இவை ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  

இதுகுறித்து மேலும் மருத்துவர்கள் கூறியதாவது, 'ஒவ்வொரு நாளும் மருத்துவமனையில் 10 ஆயிரம் நோயாளிகள் வெளியே வருகிறார்கள். அதேபோல் 3 ஆயிரம் நோயாளிகள் உள்ளே சிகிச்சை பெறுகிறார்கள். அவ்வாறு இருக்கையில், விமான நிலையத்திலிருந்து நோயாளிகளை அழைத்து செல்லும் போது, பலருக்கு வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. தொடர்ந்து, மருத்துவமனையிலிருந்து மற்றொரு வார்டுக்கு மாற்றம் செய்யப்படும்போதும் வைரஸ் தொற்ற வாய்ப்புள்ளது',  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே , சீனாவில் பலரை பலிகொண்டு, அண்டை நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் பீதியால் தமிழகத்தில் 78 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 78 பேரும் 28 நாட்களுக்கு வீட்டிலேயே கண்காணிப்பில் இருப்பார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த சென்னையில் தாம்பரம் மற்றும் தண்டையார் பேட்டை பகுதியில் புதிய மருத்துவமனை ஏற்படுத்தபட வேண்டும் என்றும், இல்லையெனில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் மருத்துவ சங்கத்தின் சார்பில் மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.