https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/original/WhatsApp_Image_2020-01-31_at_11.jpeg

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்து குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

by

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பலர் வெளிநடப்பு செய்தனர். 

இதையடுத்து கூட்ட அரங்கத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன் தெரிவித்தது:

காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் முயற்சியை மத்திய அரசுக் கைவிட வேண்டும். சுற்றுச்சூழலை பற்றி கவலைப்படாமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்தால் காவிரி டெல்டா பாலைவனமாகும் சூழல் ஏற்படும்.  

எனவே காவிரி டெல்டாவை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் குரலை மதிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது மிகப் பெரிய போராட்டமாக மாறும். அதற்கு முதல்கட்டமாக இந்த வெளிநடப்பு நடத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!