திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை
by DINகரூர்: முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான, திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி வீட்டில் சென்னை போலீஸார் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையிலிருந்து டிஎஸ்பி தலைமையில் ஆய்வாளர் உட்பட 15க்கும் மேற்பட்ட போலீஸார், கரூர் அடுத்த மண்மங்கலம் அருகே உள்ள ராமேஸ்வரம்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜி வீடு மற்றும் கரூர் ராமகிருஷ்ணபுறத்திலுள்ள செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு மற்றும் டெக்ஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவில் இருந்தபோது 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் ரூ.95 லட்சம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் இருந்தது.
மோசடி குறித்து அம்பத்தூர் கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தற்போது இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் கரூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மட்டுமல்லாது திருவண்ணாமலையில் உள்ள செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.