கரோனா பரவும் விதமும் தடுப்பு நடவடிக்கைகளும்!
by DINஉலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பற்றியும் பரவாமல் தடுத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதுபற்றிய விவரம்:
கரோனா வைரஸ் காய்ச்சல் (nCoV - 2019)
- கரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய ஒருவகை வைரஸ் கிருமியாகும்.
- சீனாவின் வூஹான் நகரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நோயின் அறிகுறிகள்:
- காய்ச்சல், இருமல் மற்றும் சளி
- உடல் சோர்வு
- ஒரு சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்.
கரோனா வைரஸ் நோய் பரவும் விதம்:
- நோய் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும், வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலம் நேரடியாகப் பரவுகிறது.
- மேலும், இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களைத் தொடும்பொழுது கைகள் மூலமாகவும் பரவுகிறது.
நோய்த் தடுப்பு நடவடிக்கைகள்:
- தினமும் 10 முதல் 15 முறை சோப்பு போட்டு, நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.
- இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கை குட்டை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும்.
- சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாகத் துடைத்துப் பராமரித்தல் வேண்டும்.
சிகிச்சைகள்
- சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகவும்.
- இளநீர், ஓ.ஆர்.எஸ், கஞ்சி போன்ற நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களைப் பருகுதல் வேண்டும்.
சுற்றுலா மேற்கொள்ளும் பொது மக்களுக்கு அறிவுரை
1. கரோனா வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்குப் பயணம் செல்லுவதைத் தவிர்க்கலாம்.
2. இருமல் சளி, ஜலதோசம் உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதையும், விழாக்களில் பங்கு பெறுவதையும் தவிர்க்க வேண்டும்.
3. சமீபத்தில் சீனாவுக்கு பயணம் சென்றுவந்தவர்கள் இருமல் சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
கைகளைக் கழுவும் முறைகள்
24 மணி நேரம் உதவி எண்: 011 / 23978046
104 -எண்னை தொடர்புகொள்ளலாம்.
தொலைப்பேசி: 044 - 2951 0400 / 044 - 2951 0500
கைப்பேசி: 9444340496 / 8754448477