திருச்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு: 50,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
திருச்சி: திருச்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் எவ்வாறு மக்கள் நல பணிகளை மேற்கொள்வது என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டினை திமுக ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற திமுக ஊராட்சி பிரதிநிதிகளின் மாநாடு திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் வந்திருக்கின்றனர். மேலும் திமுக கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட 50 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாடானது தற்போது கேர் கல்லூரியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. மாநாட்டையொட்டி திருச்சி நகரம் முழுவதும் திமுக கொடி மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரதிநிதிகள் மற்றும் திமுக தொண்டர்கள், செயல்வீரர்கள் என ஏராளமானோர் வருகை புரிந்துள்ளனர். இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு எவ்வாறு சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமே தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவதாகவும். இதனையடுத்து, இந்த மாநாட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகளும் உரையாற்றுகிறார்கள். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்படுகிறது. அத்துடன் மாநாடு நிறைவு பெறுகிறது.