கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது; நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை
புதுடெல்லி: 2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கையில் கறுப்பு பட்டை அணிந்தபடி நாடாளுமன்ற கூட்டு அவையில் காங்கிரஸ் எம்பிக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தொடர் 11ம் தேதி வரையிலும், பிறகு, மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையிலும் 2 கட்டங்களாக நடக்கிறது.
முதல் கட்டத்தில் பட்ஜெட் தாக்கல், 2ம் கட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதம், மானியக்கோரிக்கைகள் நிறைவேற்றம் என பல்வேறு அலுவல்கள் நடக்க உள்ளன. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்தி தொடங்கி வைத்து பேசினார். அரசின் கொள்கைகள் இந்தியர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருப்பதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள்;
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வாரமற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் - என திருக்குறளை மேற்கொள் காட்டினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டுள்ளது
ஜம்மு காஷ்மீரில் புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கிய அரசின் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது
எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறை சம்பவங்கள் நடப்பதாக குடியரசு தலைவர் வேதனை தெரிவித்தார்
வன்முறை சம்பவங்களால் ஜனநாயகம் பலவீனம் அடையும் என்று குடியரசு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
அயோத்தி வழக்கு தீர்ப்பின் போது மக்கள் காட்டிய முதிர்ச்சி பாராட்டத்தக்கது
புதிய அரசின் முதல் 7 மாதங்களில் நாடாளுமன்றத்தில் பல முக்கிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன
நாட்டு மக்களின் உணர்வுகளை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் பிரதிபலிப்பது அவசியம் என்று குடியரசு தலைவர் தெரிவித்தார்.