சுயமரியாதையுடன் வாழ்ந்தால் சுவனம்!
இஸ்லாமிய வாழ்வியல்
தேவையில்லாத நிலையிலும்கூட பலர் பிறரிடம் உதவி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். கையேந்த சற்றும் தயங்க மாட்டார்கள். யாசிப்பதை இஸ்லாமிய வாழ்வியல் வன்மையாகக் கண்டித்துள்ளது. “இறைநம்பிக்கையுடனும் சுயமரியாதையுடனும் வாழ்பவர்களுக்கு சுவனம் உண்டு” என்று நற்செய்தி கூறியுள்ளது. சுயமரியாதை தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறிய சில பொன்மொழிகளைப் பார்ப்போம்.நபிகளார்(ஸல்) கூறினார்கள்:தேவையின்றி மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூட சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான். (புகாரி)
உயர்ந்த (கொடுக்கும்) கரம் தாழ்ந்த(வாங்கும்) கரத்தைவிட சிறந்ததாகும்.(புகாரி)யார் தேவையற்று இருக்கவிரும்புகிறாரோ அவரை இறைவன் தேவையற்றவராக ஆக்கிவைப்பான்.(புகாரி)மக்களிடம் எதையும் கேட்காமல் இருக்கும் ஒருவருக்கு நான் சுவனம் செல்ல வாக்குறுதி அளிக்கிறேன்.(அபூதாவூத்)அபூதர் எனும் தோழர் கூறுகிறார்.
“என்னை இறைத்தூதர் அழைத்தார்கள். எந்த நிலையிலும் எந்த மனிதரிடமும் எதையும் கேட்கக் கூடாது என்று எனக்குக் கட்டளையிட்டார்கள். அதை என்மீது கட்டாயமாக்கினார்கள்.‘எனக்கு இதில் உடன்பாடுதான், ஏற்றுக்கொள்கிறேன்’ என்று நான் சொன்னேன். அதற்கு இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: “உங்களுடைய சாட்டை கீழே தவறி விழுந்தாலும் நீங்களே குதிரையிலிருந்து கீழே இறங்கி அதை எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்துத் தாருங்கள் என்று மற்றவர்களிடம் கேட்கக் கூடாது.” (அஹமத்)வாழ்வாதாரம் இல்லாமல் வறுமையில் வாடுகின்ற நிலையில், குழந்தை குட்டிகளுடன் குடும்பத் தலைவராக வாழும் நிலையில் இருந்ததும் சுயமரியாதையுடனும் ஒழுக்கப் பண்புகளுடனும் வாழ்கின்ற அடியானை இறைவன் நேசிக்கிறான்.(இப்னு மாஜா)ஒருவர் ஏழ்மையாலும் பசி, பட்டினியாலும் வாடுகின்ற நிலையிலும் தம்முடைய இக்கட்டான நிலைமையை மற்றவர்களுக்குத் தெரிவிக்காமல் மறைக்கின்றார் எனில் அவருக்கு அனுமதிக்கப்பட்ட வழியில் ஓராண்டு முழுவதற்குமுரிய வாழ்வாதாரங்களைக் கிடைக்கச் செய்வது வல்லமையும் மாண்பும் கிடைக்க இறைவனின் கடமையாகும்.(பைஹகி)யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்வாரோ அவரை சுயமரியாதையோடு இறைவன் வாழச் செய்வான். யார் பிறரிடம் தேவையற்றவராக இருக்கிறாரோ இறைவன் அவரைத் தேவையற்றவராக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறாரோ அவரை இறைவன் பொறுமையாளராக ஆக்குவான். பொறுமையைவிடச் சிறந்த, விரிவான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை. (முஸ்லிம்)
- சிராஜுல்ஹஸன்
இந்த வார சிந்தனை
“தன்னைத்தானே சுய சோதனை செய்துகொண்டு, மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கைக்காகச் செயல்படுபவன் அறிவாளி. தன் மன இச்சைகளின்படி நடந்துவிட்டுப் பின்னர் இறைவனிடம் எதிர்பார்ப்பவன் அறிவிலி.”
- நபிமொழி.