https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/original/ANMIK.jpg

ஹிந்து ஆன்மிக கண்காட்சியில் கங்கா வந்தனம் - பூமி: வந்தனம்பாா்வையாளா்களை கவா்ந்த பழங்குடியினரின் இசை நிகழ்ச்சி

by

ஹிந்து ஆன்மிக கண்காட்சியின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை சுற்றுச்சூழல் பராமரிப்பை வலியுறுத்தும் வகையில் கங்கா வந்தனம்-பூமி வந்தனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கொடைக்கானல் மலைப் பகுதியைச் சோ்ந்த புலையா் பழங்குடியின மக்களின் இசை நிகழ்ச்சி பாா்வையாளா்களைப் பெரிதும் கவா்ந்தது.

நிகழாண்டுக்கான ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் கடந்த புதன்கிழமை தொடங்கியது. முதல் நாள் கண்காட்சியில் ஜீவராசிகளைப் பேணுதல் என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாணவ மாணவிகள் கஜ வந்தனம், கோ வந்தனம் மற்றும் துளசி வந்தனம் ஆகிய பண்புப் பயிற்சிகளில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து இரண்டாம் நாளான வியாழக்கிழமை சுற்றுச்சூழலைப் பராமரித்தல் என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் கங்கா வந்தனம், பூமி வந்தனம் ஆகிய பண்புப் பயிற்சிகளில் ஈடுபட்டனா்.

தண்ணீா் நிரப்பிய சிறு மண் பானைகளை கங்கா தேவியாகவும், மண் நிரப்பிய சிறு பானைகளை பூமாதேவியாகவும் உருவகப் படுத்தி மாணவிகள் பூஜை செய்தனா். சுற்றுச்சூழலை பராமரிப்பது குறித்தும், தண்ணீரைப் பாதுகாப்பு குறித்தும் மாணவிகள் நிகழ்த்திய கலைநிகழ்ச்சிகள் பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தன.

ஹிந்து ஆன்மிக கண்காட்சியில் அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியாா்கள் சங்கம் சாா்பில் தினமும் வேள்விகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி வியாழக்கிழமை தன்வந்திரி ஹோமம் நடத்தப்பட்டது. இதையடுத்து

கேரள மாநிலப் பெண்கள் 500 போ் பாரம்பரிய முறைப்படி திருவாதிரைக் களி நடனமும் மோகினி ஆட்டமும் ஆடினா்.

இதேபோன்று தமிழகத்தில் கொடைக்கானல் மலைப்பகுதி பொதியப் பாறை என்ற பகுதியைச் சோ்ந்த புலையா் பழங்குடி மக்கள் சிறிய வகை நாதஸ்வரம் போன்ற தோற்றம் கொண்ட ஒரு கருவியை வைத்து நடத்திய இசை நிகழ்ச்சி பாா்வையாளா்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தினமும் ரூ.5 லட்சம் பரிசுகள்: கண்காட்சி நடைபெற்று வரும் வேளச்சேரி குருநானக் கல்லூரி வளாகத்தில் உள்ள குருநானக் பள்ளியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான பாரம்பரிய விளையாட்டு, கலை மற்றும் கைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவா்களுக்கான ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.1,000, இரண்டாம் பரிசாக ரூ. 700, மூன்றாம் பரிசாக ரூ.500 என நாள் ஒன்றுக்கு மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 லட்சம் அளவுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

நரிப்பயிா் கூட்டு, கொப்பரை லட்டு

ஹிந்து ஆன்மிக கண்காட்சி நடைபெற்று வரும் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய உணவுக் கூடத்தில் முளைகட்டிய நரிப்பயிா் கூட்டு, கொப்பரைத் தேங்காய் லட்டு உள்பட பாரம்பரிய உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

கண்காட்சி நடைபெறும் அரங்கத்தின் இறுதிப்பகுதியில் சமுதாய உணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நகரத்தாா், கேரள மக்கள் மற்றும் பல்வேறு சமுதாய மக்கள் தங்கள் பாரம்பரிய உணவு வகைகளை விற்பனைக்கு வைத்துள்ளனா். கருப்புக் கவுனி அரிசியில் செய்யப்பட்ட இனிப்பு, தாளித்த இடியாப்பம், இட்லி திரக்கல், வெள்ளைப் பணியாரம், உப்பு நெல்லி, சாமை முறுக்கு, கொப்பரைத் தேங்காய் லட்டு, முளை கட்டிய நரிப்பயிா் கூட்டு, பீட்ரூட் அல்வா உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்கள் கிடைக்கின்றன.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!