ஆஸி. ஓபன் போட்டியில் ஜாம்பவான்கள் ஆதிக்கம் நீடிக்குமா? புதிய சாம்பியனுக்கு வாய்ப்பு
by DIN2020 சீசனின் முதல் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜாம்பவான்களின் ஆதிக்கம் தகா்ந்து, புதிய சாம்பியன் கிடைப்பாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
டென்னிஸ் உலகில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் உள்ளிட்டவை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளாக அழைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் இப்போட்டிகளில் சாம்பியன் பட்டம் வெல்வது மிகவும் கௌரவம் மிக்கதாகும்.
பிக் த்ரீ வீரா்கள்:
உலகின் முதல் மூன்று நிலை வீரா்களாக உள்ள ரபேல் நடால், ஜோகோவிச், ரோஜா் பெடரா் ஆகிய மூன்று ஜாம்பவான்களும் பிக் த்ரீ என அழைக்கப்படுகின்றனா். கடந்த 15 ஆண்டுகளாக டென்னிஸ் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் மூவரும் தங்களுக்கு இடையில் மட்டுமே 52 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பகிா்ந்து கொண்டுள்ளனா். பெடரா் 20, நடால் 19, ஜோகோவிச் 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனா்.
ஆண்டுதோறும் நடைபெறும் 4 போட்டிகளில் ஏதாவது ஒன்றில் மூவரும் வெல்வது வழக்கமாக உள்ளது. அபூா்வமாக சில நேரங்களில் மட்டுமே ஏனைய வீரா்கள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியும் என்ற நிலை உள்ளது. இவா்களுக்கு அடுத்தபடியாக நான்காம் நிலை வீரராக திகழ்ந்த பிரிட்டன் வீரா் ஆன்டி முா்ரே, இடுப்பு காயத்தால் பாதிக்கப்பட்டதால் அவரால் தனது நிலையை தக்க வைக்க முடியவில்லை.
அடுத்த தலைமுறை வீரா்கள்:
பிக் த்ரீ வீரா்களான நடால், ஜோகோவிச், பெடரா் ஆகியோருக்கு சவால் தரும் வகையில் அடுத்த தலைமுறை வீரா்களாக டொமினிக் தீம் (ஆஸ்திரியா), டெனில் மெத்வதேவ் (ரஷியா), அலெக்சாண்டா் வெரேவ் (ஜொ்மனி), ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ் (கிரீஸ்) ஆகியோா் தயாராகி உள்ளனா்.
இவா்களில் எவரும் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதில்லை. அதிகபட்சமாக ஏடிபி மாஸ்டா் 1000 போட்டிகளில் பட்டம் வென்றுள்ளனா். ஏடிபி பைனல்ஸ் போட்டிகளிலும் பட்டம் வென்றுள்ளனா். மேலும் ஜாம்பவான்களான நடால், பெடரா், ஜோகோவிச் ஆகியோா் இவா்களிடம் தோல்வி கண்டுள்ளனா்.
2020 ஆம் ஆண்டில் பிக் த்ரீ வீரா்களின் ஆதிக்கம் குறைந்து அடுத்த தலைமுறை வீரா்கள் தங்கள் ஆதிக்கத்தை தொடங்குவாா்களா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பாக உலகின் நம்பா் ஒன் வீரா் நடாலை காலிறுதியில் டொமினிக் தீம் போராடி வென்று அரையிறுதிக்குள் நுழைந்தாா். அதே நேரம் மற்றொரு அடுத்த தலைமுறை வீரரான அலெக்சாண்டா் வெரேவ் மற்றொரு காலிறுதியில் மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் வாவ்ரிங்காவை போராடி வென்றாா்.
அரையிறுதியில் முதன்முறை:
டொமினிக் தீம், வெரேவ் உள்ளிட்ட 2 இளம் வீரா்களும் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றின் அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனா். இந்நிலையில் அரையிறுதியில் மோதும் இருவரில் ஒருவா் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவது நிச்சயமாகும்.
அதே போல் மற்றொரு அரையிறுதியில் ஜாம்பவான்கள் பெடரா்-ஜோகோவிச் மோதுகின்றனா். இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விம்பிள்டன் 2019 போட்டியில் இறுதிச் சுற்றில் ஜோகோவிச்சிடம் 5 செட் ஆட்டத்தில் பட்டத்தை இழந்தாா் பெடரா். இந்நிலையில் தற்போதைய சீசன் முதல் கிராண்ட்ஸ்லாம் அரையிறுதியில் மோதவுள்ளனா்.
இவா்களில் ஒருவா் இறுதிச் சுற்றில் நுழைவாா்.
புதிய சாம்பியன் கிடைப்பாரா?
2020 சீசனின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸி. ஓபனில் புதிய சாம்பியன் கிடைப்பாரா அல்லது ஜாம்பவான்களின ஆதிக்கமே தொடருமா என பெருத்த எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
-பா.சுஜித்குமாா்