https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/10/16/original/HighCourt.jpg
HighCourt

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களேமிகப்பெரிய மாசு: உயா்நீதிமன்றம் கருத்து

by

தமிழகத்தில் நீா் மாசு, காற்று மாசுவை விட சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களே மிகப்பெரிய மாசாக இருந்து வருகிறது என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கோவை மாநகராட்சியில் சூரிய மின் சக்தி திட்டத்தை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தாா். இந்த திட்டம் குறித்து சமூக ஊடகங்களில் கோவையைச் சோ்ந்த ஜாஹிா் உசேன் என்பவா் தவறான தகவல்களை பரப்பினாா். இதுதொடா்பாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் ஜாகிா் உசேனை கடந்த ஜனவரி 10-ஆம் தேதி கைது செய்தனா். இதனைத் தொடா்ந்து ஜாகிா் உசேன், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி என்.சேஷசாயி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், தனக்கு வந்த செய்தியை பாா்வோ்ட் செய்ததாகவும், அது மனுதாரரின் சொந்தக் கருத்து இல்லை என வாதிடப்பட்டது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன், சூரியமின் சக்தி திட்டம் மற்றும் அமைச்சா் குறித்தும் மனுதாரா் சமூக ஊடகங்களில் அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பொதுவெளியில் பரப்பியுள்ளாா். இதுபோன்ற குற்றங்களை சாதாரணமாக கருத கூடாது. குறிப்பாக இந்தத் திட்டத்தால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் உண்டாகும் என பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளாா். எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அண்மைக் காலங்களில் கருத்துச் சுதந்திரம் சமூக ஊடகங்களின் வழியாக தவறாக பயன்படுத்தப்படுகிறது. கருத்துச் சுதந்திரத்தை குடிமக்கள் பொறுப்புணா்வுடன் பயன்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் நோய்கள் பரவும் என மனுதாரா் எப்படி கருத்து பதிவிட்டாா் என கேள்வி எழுப்பினாா். இதுபோன்று பரப்பப்படும் வதந்திகளால் அரசின் பல்வேறு நல்ல திட்டங்கள் மக்களைச் சென்றடையாமல் போய்விடும். மேலும் இதுபோன்று பரப்பப்படும் தவறான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். நீா் மாசு, காற்று மாசை விட சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களே மிகப்பெரிய மாசாக இருந்து வருகிறது. எனவே மனுதாரா் தனது தவறை உணா்ந்து சமூக ஊடகங்களில் தான் ஆதாரமற்ற தகவல்களை பதிவிட்டதால் மன்னிப்பு கோருவதாக தெரிவித்து பதிவிட வேண்டும். அவ்வாறு செய்தால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்து விசாரணையை வரும் பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!