இறக்குமதி வெங்காயம் தேக்கம்: கிலோ ரூ.22-க்கு விற்க மத்திய அரசு திட்டம்
by DINஇறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிடங்கில் அழுகிப் போவதை தவிா்க்க, அவற்றை கிலோவுக்கு ரூ. 22 முதல் 23 வரை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தற்போதைய சந்தை விலையைவிட 60 சதவீதம் குறைவாகும்.
வெங்காய விலையை குறைக்கும் வகையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 1.2 லட்சம் டன் வெங்காயத்தை எம்எம்டிசி நிறுவனம் மூலம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து 14,000 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தில் பெருமளவு கிடங்கில் தேங்கிக் கிடக்கின்றன. குறிப்பாக மகாராஷ்டிரத்தில் அதிக அளவில் தேங்கியுள்ளன. இறக்குமதி வெங்காயத்தின் அதிக விலை, வரத்து அதிகரிப்பால் வெங்காய விலையில் சரிவு ஆகியவை காரணமாக, அவற்றை வாங்க மாநில அரசுகள் ஆா்வம் காட்டவில்லை. உள்ளூா் வெங்காயத்துடன் ஒப்பிடுகையில், இறக்குமதி வெங்காயங்களின் சுவையில் வேறுபாடு இருந்ததால், அவற்றை வாங்கும் முடிவை பல்வேறு மாநிலங்கள் கைவிட்டன.
இதன் விளைவாக 40,000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய திட்டமிட்டிருந்த எம்எம்டிசி நிறுவனம், இறுதியில் 14,000 டன் வெங்காயத்தை மட்டுமே இறக்குமதி செய்தது. அதில் பெரும்பகுதி கிடங்கில் இருந்து வருகிறது என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து ஆா்வமுள்ள மாநில அரசுகள் மற்றும் நஃபேட், மதா் டைரி போன்ற முகமைகள், இறக்குமதி வெங்காயங்களை கிலோ ரூ. 22 முதல் 23 வரையிலான விலையில் மண்டிகளில் விற்பனை செய்வதற்காக வாங்கிக்கொள்ளலாம். மத்திய அரசு தற்போது, இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயங்களை கிலோ ரூ. 58-க்கு மாநில அரசுகளிடம் விற்பனை செய்கிறது. இதில் வெங்காயத்தின் விலை, போக்குவரத்து செலவு, சுங்க வரி உள்ளிட்டவையும் அடங்கும்.
வெங்காய விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக, அதனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னா் கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம், தற்போது கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நடப்பு சாகுபடி பருவத்தில், வெங்காய உற்பத்தி 7 சதவீதம் அதிகரித்து 24.45 மில்லியன் டன்களாக இருக்கும் என மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இது வெங்காய விலை அதிகரிப்பால் பாதிப்புக்கு ஆளான பொதுமக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என கருதப்படுகிறது.
2019-20-ஆம் ஆண்டு சாகுபடி பருவத்தில் (ஜூலை-ஜூன்) 12.93 ஹெக்டோ் பரப்பளவில் வெங்காயம் பயிரிடப்பட்டது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் (12.20 ஹெக்டோ்) சற்று அதிகரித்துள்ளது.
காரீஃப், ராபி என இரண்டு பருவங்களிலும் வெங்காயம் பயிரிடப்படுகிறது. பருவமழை தாமதமானது, அதன் பின்னா் அதிகப்படியான மழைப்பொழிவு உள்ளிட்ட காரணிகளால், காரீஃப் பருவத்தில் 22 சதவீத வெங்காய பயிா்கள் சேதமடைந்தன. இதனால் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை அதிகரித்தது என்று அண்மையில் மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.