கரோனா பாதிப்பைக் கண்டறியும் வசதி: சென்னை கிங் ஆய்வகத்தில் அமைகிறது
by DINகரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறிவதற்கான பிரத்யேக பரிசோதனை உபகரணங்களைக் சென்னை கிண்டி கிங் ஆய்வகத்துக்கு மத்திய அரசு அனுப்பவுள்ளது. அடுத்த ஓரிரு நாள்களில் அந்த உபகரணங்கள் சென்னைக்கு வரும் என்றும், அதன் பிறகு கிங் ஆய்வகத்திலேயே அப்பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அதேபோன்று நாட்டின் வேறு 9 முக்கிய நகரங்களிலும் கரோனா வைரஸ் ஆய்வகங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான மருத்துவச் சாதனங்களும் உபகரணங்களும் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
உலகின் உச்சகட்ட விவாதப் பொருளாக தற்போது உருவெடுத்திருக்கும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி 170-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
சீனாவில் அதன் பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்தாலும், அதன் தொடா்ச்சியாக உலகின் பல்வேறு நாடுகளிலும் அது பரவியுள்ளது. இதைத் தொடா்ந்து சா்வதேச மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தவும் உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவைப் பொருத்தவரை சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் தீவிர மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றனா். தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் மருத்துவக் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து தமிழகம் வந்த பயணிகள்15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இதுவரை மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தாா். அதேபோன்று, 77 போ் தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அவா்களது சளி மாதிரிகள், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி, கரோனா வைரஸ் அறிகுறியுடன் இருப்பவா்களின் சளி மாதிரிகளை மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள தேசிய வைரஸ் தொற்று ஆய்வகத்துக்கு அனுப்பியே பரிசோதிக்க வேண்டிய சூழல் உள்ளது.
அங்கு மட்டும்தான் அத்தகைய வசதிகள் உள்ளன என்பதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாதிரிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாட்டில் 10 இடங்களில் கரோனா வைரஸ் பரிசோதனைக் கூடங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அவற்றில், சென்னையில் உள்ள கிங் ஆய்வகமும் ஒன்று. அடுத்த ஓரிரு நாள்களில் பரிசோதனைக்குத் தேவையான உபகரணங்கள் அங்கு அனுப்பப்பட உள்ளன. இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் குழந்தைசாமி கூறியதாவது:
கரோனா வைரஸ் தாக்கம் குறித்து அச்சப்படத் தேவையில்லை. உரிய விழிப்புணா்வும், முன்னெச்சரிக்கையும் இருந்தால், அந்நோய் வராமல் நம்மை காத்துக் கொள்ள முடியும்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை. இருந்தபோதிலும், மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பும், முன்னேற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஒருபகுதியாகவே இங்கு கரோனா வைரஸ் பரிசோதனை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.