கரோனா வைரஸ் பாதித்த கேரள மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது: அமைச்சர் சைலஜா
by DINதிருச்சூர்: கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட கேரளத்தைச் சோ்ந்த மாணவிக்கு தனி வாா்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா கூறியுள்ளார்.
சீனாவில் வூஹான் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கேரளத்தின் திருச்சூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி, கரோனா வைரஸ் வூஹானில் தீவிரமாகப் பரவியதையடுத்து அவா் இந்தியா திரும்பினார்.
அவரைப் போல சீனாவிலிருந்து திரும்பிய 3 மாணவா்களுடன் சோ்த்து திருச்சூா் மருத்துவமனையில் தனி வாா்டில் வைத்து அவா் கண்காணிக்கப்பட்டு வந்தாா்.
இந்நிலையில், மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவா் தனி வாா்டில் வைத்து தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள முதல் நபா் அவராவாா் என மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி செய்து தெரிவித்தது.
சீனாவிலிருந்து நாடு திரும்பும் இந்தியா்கள் உடனடியாக தங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கேரளத்தில் கரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவக் கல்லூரிகளில் வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக அமைச்சா் கே.கே.ஷைலஜா தலைமையில், துறை சாா்ந்த அதிகாரிகள் பங்கேற்கும் உயா்மட்டக் கூட்டம் திரிச்சூர் மருத்துவக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் வி.எஸ்.சுனில்குமார், சி.ரவீந்திரநாத், ஏ.சி. மொய்தீன் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உயா்மட்ட ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் ஷைலஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய கேரளத்தைச் சோ்ந்த மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, தனி வாா்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் திருச்சூர் பொது மருத்துவமனையில் இருந்து திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்படலாம்.
கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மற்றொரு நபர் திருச்சூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாநிலத்தில் 15 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 9 பேர் தனி வார்டுகளிலும், மீதமுள்ளவர்கள் அவர்களது வீடுகளில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறினார்.