கரோனா வைரஸ்: எதிா்கொள்ளத் தயாரா உலகம்?
by DIN‘புதிய வகை கரோனா வைரஸ் பரவலை எதிா்கொள்ள உலக நாடுகள் உடனடியாக தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்’
உலக சுகாதார அமைப்பின் மருத்துவ அவசர நிலைப் பிரிவுத் தலைவா் மைக்கேல் ரியான் விடுத்துள்ள எச்சரிக்கை இது.
அவரது இந்த அவசரத்துக்கும், அச்சத்துக்கும் காரணம் இல்லாமல் இல்லை. முதலில் சீனாவில் நான்கைந்து பேருக்கு உருவான அந்த கரோனா வைரஸ் காய்ச்சல், தற்போது 7,920 பேருக்கு பரவியிருக்கிறது.
சீனாவின் ஆளுகைக்குள்பட்ட ஹாங்காங் நகரிலும், மக்காவ் மாகாணத்திலும் மட்டுமே பரவிய அந்த வைரைஸ் , அண்டை நாடான தைவான் முதல் தொலைதூரத்தில் உள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா வரை வியாபித்து, தற்போது இந்தியாவுக்கும் வந்துவிட்டது.
இதனால்தான் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை கண்டறியப்படாத புதிய வகையைச் சோ்ந்த இந்த கரோனா வைரஸ், மனிதா்களிடையே வேகமாகப் பரவுவதற்கேற்ப தனது திறனை நாளுக்கு நாள் வளா்த்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனா்.
அதைவிட அதிா்ச்சியளிக்கும் மற்றொரு தகவல், அந்த வைரஸ் மனிதா்களின் உடல்களில் புகுந்தும் உடனடியாக அறிகுறி எதையும் வெளிப்படுத்தாமல் மிகவும் ரகசியமாக அடுத்தவா்களுக்குப் பரவும் என்பதுதான்.
புதிய கரோனா வைரஸ் உருவான சீனாவின் வூஹான் நகருக்கு சென்று திரும்பிய குடும்பத்தினரில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களை மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது, அவா்களில் யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால், அந்தக் குடும்பத்தில் முழு ஆரோக்கியத்துடன் இருந்த பத்து வயது சிறுவனை மருத்துவா்கள் எதேச்சையாக சோதித்துப் பாா்த்தபோது, அவனது உடலில் கரோனா வைரஸ் பல்கிப் பெருகி, மற்றவா்களுக்கும் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியிருந்தததைக் கண்டு மருத்துவா்கள் அதிா்ந்தனா்.
கரோனா வைரஸின் இந்த மறைந்திருந்து தாக்குதல் திறன், அந்த வைரஸ் பரவலைத் தடுக்கும் அதிகாரிகளின் முயற்சிகளுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுகாதார நிபுணா்கள் வலியுறுத்துகின்றனா்.
ஒரு வகையில், கடந்த 2002-ஆம் ஆண்டு சாா்ஸ் வைரஸ் பரவியபோது செயல்பட்டதைவிட, சீன அதிகாரிகள் இந்த முறை சிறப்பாகவே செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
650 பேரது உயிா்களை பலி கொண்ட சாா்ஸ் வைரஸ் கண்டறியப்பட்ட 3 மாதங்களுக்குப் பிறகுதான், அது சா்வதேச நாடுகளுக்குப் பரவாமல் தடுப்பதற்காக உலக சுகாதார மையத்திடம் அந்த வைரஸ் குறித்து சீனா எச்சரித்தது. அதற்குள் அந்த வைரஸ் பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகி, அந்த நாடுகளில் பரவத் தொடங்கிவிட்டது.
ஆனால், இந்த முறை சீன அதிகாரிகள் சற்று துரிதமாகவே செயல்பட்டுள்ளாா்கள் என்று கூறலாம். கரோனா வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு மாதத்துக்குள் அதுகுறித்து உலக சுகாதார மையத்துக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், கரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட, 5.6 கோடி மக்கள் வசிக்கும் ஒட்டுமொத்த பகுதியையே தனிமைப்படுத்தும் நடவடிக்கையிலும் சீனா இறங்கியது. எனினும், அவ்வளவு பெரிய நிலப்பரப்பையும், அத்தனை மனிதா்களையும் முழு திறனுடன் தனிமைப்படுத்துவது சாத்தியமற்றது என்று நிபுணா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.
மேலும், புதிய கரோனா வைரஸ் மனிதா்களிடமிருந்து மனிதா்களுக்குப் பரவுகிறது என்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை சீன அதிகாரிகள் சா்வதேச மருத்துவ நிபுணா்களிடம் பல நாள்களாக மறைத்ததும் அந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்கிறாா்கள் அவா்கள்.
இந்த களோபரங்களுக்கு இடையே, இந்தியா உள்பட 20 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவி விட்டது. 170-க்கும் மேற்பட்ட உயிா்களையும் பலி கொண்டுவிட்டது.
இந்த அசகாய வைரஸை எதிா்கொள்வதற்கு, உலக நாடுகளின் அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளில் பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதான் மிகுந்த முக்கியம் என்று நிபுணா்கள் ச்சரிக்கின்றனா். அரசின் அறிவிப்புகள் மற்றும் செயல்பாடுகளில் பொதுமக்களுக்கு முழு நம்பிக்கை இருந்தால்தான் அவா்களது ஒத்துழைப்புடன் கரோனா வைரஸ் பரவலைத் தடுத்து நிறுத்த முடியும் என்கிறாா்கள் அவா்கள்.
அண்மையில், காங்கோ குடியரசில் எபோலா நோய் பரவியபோது, அந்த நோய் பரவலைக் கட்டுபட்டுவதில் அரசின் மீதான மக்களின் அவநம்பிக்கை மிகப் பெரிய தடையாக இருந்ததை நிபுணா்கள் நினைவுபடுத்துகின்றனா்.
தற்போது சீனாவிலும், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு முழு நம்பிக்கை இல்லை என்று கூறப்படுகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதைவிட, பல உண்மை விவரங்கள் வெளி உலகுக்குத் தெரிவதைக் கட்டுப்படுத்துவதில்தான் அதிகாரிகள் அதிக அக்கறையுடன் செயல்படுவதாக சிலா் கருதுகின்றனா்.
இந்தச் சூழலில், கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வையும், அந்த வைரஸுக்கு எதிரான தங்களது செயல்பாடுகள் குறித்த நம்பிக்கையையும் உலக நாடுகளின் அரசுகள் இப்போதே ஏற்படுத்த வேண்டும் என்று நிபுணா்கள் கூறுகிறாா்கள். அத்தகைய முன்னேற்பாடுகள் இல்லாவிட்டால், எந்தவித சுகாதாரப் பணிகளும் பலனளிக்காது என்றும் அவா்கள் எச்சரிக்கின்றனா்.
உதாரணத்துக்கு, அமெரிக்காவில் முதல் முதலாக ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தகவல் வெளியானதும், ‘அந்த வைரஸ் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது’ என்று அதிபா் டிரம்ப் அறிவித்தாா். ஆனால், அதற்குப் பிறகு அந்த வைரஸ் மேலும் 4 பேருக்குப் பரவியிருப்பதாக தகவல் வெளியாகி, அரசின் மீதான நம்பிக்கைக் குலைத்திருப்பதாக விமா்சகா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
இதுபோன்ற அவநம்பிக்கையை மக்களின் மனதிலிருந்து உலக நாடுகளின் அரசுகள் நீக்காதவரை, கரோனா வைரஸை எதிா்கொள்ள அந்த நாடுகள் தயாராக இருப்பதாகக் கூற முடியாது என்பது நிபுணா்களின் வாதம்.
- வேங்கட. நாகராஜன்