https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/29/original/tanjore_1_html_m2aaf7215.jpg
தஞ்சை பெரிய கோவில்

தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரிய மனுக்கள் தள்ளுபடி: உயர் நீதிமன்ற மதுரை கிளை

by

மதுரை: தஞ்சை பெரியகோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.

தஞ்சை பெரியகோயிலில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் என இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தலாம் என்று கூறியிருக்கும் நீதிபதிகள், அறநிலையத் துறை அளித்த உறுதிமொழியின்படி, குடமுழுக்கு நடந்ததை உறுதி செய்து  நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதேப்போல சென்னையைச் சோ்ந்த ரமேஷ், குடமுழுக்கை சம்ஸ்கிருதத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுக்கள் கடந்த செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தபோது குடமுழுக்கை தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதைப் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும் படிக்க.. பெரியகோயில் குடமுழுக்கு: பிப். 4, 5-இல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தமிழில் குடமுழுக்கு...

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம். துரைசாமி, டி. ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிய மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் வாதிடுகையில், ஆகமம் என்பது தமிழ் மொழிக்கானது, தமிழில் மட்டுமே பொருள் உள்ளது. சம்ஸ்கிருதத்தில் அதற்கான பொருள் இல்லை. அதோடு ஆகம விதிகள் தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் பின்பற்றப்படுவதில்லை. ஆங்கிலப் புத்தாண்டன்று இரவு நேர பூஜைகள் நடக்கிறது. அந்த வகையில் குடமுழுக்கு கடைசியாக சம்ஸ்கிருதத்தில் நடைபெற்றாக கூறப்பட்டாலும், அதில் மாற்றம் கொண்டு வந்து தமிழில் நடத்தலாம். எனவே தமிழிலேயே குடமுழுக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்றனா்.

சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு...

சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கை நடத்த வேண்டும் என இடை மனுதாக்கல் செய்த மனுதாரா் தரப்பில், சம்ஸ்கிருதம் என்பது பேசும் மொழியல்ல, அது தேவ மொழியாகும். தஞ்சையில் கடந்த முறை சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடைபெற்றால் தான் பல்வேறு தீ விபத்துகள் நடத்துள்ளதாக ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை மனுதாரா்கள் வைத்துள்ளனா். இது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. எனவே சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழுக்கு முக்கியத்துவம்...

https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/23/original/tanjore.JPG

இதையடுத்து, இந்து அறநிலையத்துறை தரப்பில், தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கில் சம்ஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகள் மற்றும் மகா அபிஷேகத்தின் போதும் திருமுறைகளைப் பாட ஓதுவாா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தமிழில் குடமுழுக்கு கோரிய மனுதாரா்கள் தரப்பு, தமிழில் நடத்தப்படும் என கூறிவிட்டு, கருவறைகளில் அவ்வாறு தமிழ் மொழியில் நடத்தப் போவதில்லை என கூறப்படுகிறது. எனவே, ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குடமுழுக்கை நடத்தி கண்காணிக்க வேண்டும் என கோரப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்து அறநிலையத் துறை தமிழில் நடத்துவதற்கு உத்தரவாதம் அளித்துள்ளதால், ஓய்வுப் பெற்ற நீதிபதி நியமனத்திற்கு அவசியமில்லை என தெரிவித்தனா்.

3 மணி நேரம் வாதம்

இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் தொடங்கி மாலை 4.45 வரை நடைபெற்றது. நீதிபதிகள் அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்துகொண்டு, மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இன்று தீர்ப்பு

இந்த நிலையில், தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிய மனுக்கள் மீது இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது, தஞ்சை பெரிய  கோயிலில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்க நடத்த இந்து அறநிலையத் துறைக்கு அனுமதி அளித்தும், தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிடக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!