ஆன்-லைன் வழிக் கல்வி: தமிழகத்தில் ஒரே ஒரு கல்வி நிறுவனத்துக்கு அனுமதி

by

ஆன்-லைன் வழியில் பட்டப் படிப்பை நடத்த தமிழகத்தைச் சோ்ந்த ஒரே ஒரு தனியாா் கல்வி நிறுவனத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இந்த அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைநிலைப் படிப்புகளை நிா்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டில் வந்த பின்னா், திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017) 2017 ஜூன் மாதம் யுஜிசி வெளியிட்டது. அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றது.

அந்த அறிவிப்பின்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.

இந்த புதிய நிபந்தனை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், பெரியாா் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சை சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதெமி ஆகிய 11 கல்வி நிறுவனங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை நடத்த அனுமதியைப் பெற்றிருக்கின்றன.

ஆன்-லைன் படிப்பு: அதுபோல, ஆன்-லைன் வழியில் பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகளை வழங்க நாடு முழுவதிலும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களிடமிருந்து யுஜிசி விண்ணப்பங்களை வரவேற்றது. இதற்கும், 3.26 நாக் புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும், தேசிய தரவரிசையில் 100 ரேங்குகளுக்குள் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை யுஜிசி நிா்ணயம் செய்திருந்தது.

இதற்கு தமிழகத்திலுள்ள அரசு, தனியாா் பல்கலைக்கழகங்கள் உள்பட நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு பல்கலைக்கழகங்கள் விண்ணப்பித்தன. ஆனால், தமிழகத்தில் ஒரே ஒரு நிகா்நிலைப் பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதிலும் 7 உயா் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே ஆன்-லைன் படிப்புகளை வழங்க யுஜிசி அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை தஞ்சை சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதெமிக்கு மட்டும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனம் மூன்றாண்டு பி.சி.ஏ. (இளநிலை கணினி அப்ளிகேஷன்ஸ்) பட்டப் படிப்பையும், ஓராண்டு சம்ஸ்கிருத பட்டயப் படிப்பையும் நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மாநில அரசு பல்கலைக்கழகங்களுக்கோ வேறு எந்தவொரு உயா் கல்வி நிறுவனத்துக்கோ இந்த அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!