http://img.dinakaran.com/data1/DAanmeegam/Tamil_Daily_News_201__813839137554169.jpg

வேண்டுவோருக்கு குலதெய்வம் மூங்கிலணை காமாட்சியம்மன்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் இருந்து 3 கிமீ தொலைவில் மஞ்சளாறு ஆற்றின் கரையில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயில்களின் வரிசையில் காஞ்சிக்கு அடுத்தபடியாக இந்த கோயில் கருதப்படுகிறது.இக்கோயில் நுழைவுவாயிலில் விநாயகர் சிலை ஒன்று உள்ளது. நடை சாத்திய நிலையில் உள்ள சன்னதியின் கதவில் பாம்பின் தலைகளுடன் கூடிய காமாட்சியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். தங்களது குலதெய்வம் எது என்பது தெரியாத பக்தர்கள், மூங்கிலணை காமாட்சியம்மனை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வணங்கினால், அந்த வழிபாடு குலதெய்வத்தையும் அடையும் என்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு.

தல வரலாறு

200 ஆண்டுகளுக்கு முன்னர் 50 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இக்கோயில், தற்போது  இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள அம்மன் சன்னதி, குத்து வீடு என அழைக்கப்படுகிறது. சன்னதியின் மேற்கூரை ஒரு வகை புற்களால் வேயப்பட்டுள்ளது. வருடந்தோறும் சன்னதியின் மேற்கூரை அகற்றப்பட்டு, புதிய கூரை வேயப்படுகிறது.மூடிய நிலையில் உள்ள இந்த சன்னதியில் காமாட்சியம்மன் சிலைக்கு பதில் பழமையான மரப்பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மாசி மகா சிவராத்திரியையொட்டி 2 நாட்களுக்கு சன்னதி நடை திறக்கப்பட்டு மரப்பெட்டிக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.பூஜையின்போது குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும் கண்களில் துணியை கட்டியபடி சன்னதி முன்பு நின்று அம்மனை வழிபடுகின்றனர். இந்த 2 நாட்கள் தவிர வருடம் முழுவதும் சன்னதி வாயில் கதவில் அமைக்கப்பட்டுள்ள காமாட்சியம்மன் உருவத்திற்கே 3 கால பூஜை நடக்கிறது. தீபாராதனையின் போது அம்மனுக்கு தேங்காய் உடைக்கப்படுவதில்லை. வாழைப்பழங்கள் படையலிடப்படுவதில்லை.
*******
செவ்வாய், வெள்ளி ஆகிய வார நாட்களிலும், பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ தினங்களிலும் பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வணங்குகின்றனர். குழந்தை பேறு இல்லாதவர்கள், இங்குள்ள ஒரு மரத்தில் தொட்டில் கட்டி வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கரும்பு தொட்டிலில் தங்களது குழந்தையை வைத்து கோயில் வளாகத்தை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இளம்பெண்கள் சன்னதி முன்பு பூ முடித்துப் பார்த்து அம்மனின் உத்தரவு பெற்று திருமணம் செய்கின்றனர்.மாசி மகா சிவராத்திரி திருவிழாவின்போது பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தினமும் மாலை 6 மணிக்கு உறுமி, சங்கு, சேகண்டி முழங்க சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. தினமும் காலை 6 முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்திருக்கிறது.