http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_200161159038544.jpg

உத்திரபிரதேசத்தில் 23 குழந்தைகள், பெண்களை பிணைக்கைதிகளாக சிறை பிடித்தவர் சுட்டுக்கொலை: போலீசார் அதிரடி

லக்னோ: உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி முனையில் 23 குழந்தைகளை பிணை கைதியாக பிடித்தி வைத்திருந்த நபரை சுட்டு வீழ்த்திய காவல்துறையினர், குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். பரூக்காபாத் மாவட்டம் கசாரியா கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் பாத்தம். ஒரு கொலை வழக்கில் சிறை சென்ற பாத்தம், ஜாமினில் வெளியே வந்துள்ளார். நேற்று தனது மகளின் பிறந்தநாள் விழா கொண்டாடுவதாக கூறி கிராமத்தினரை அழைத்துள்ளார். அதன்படி மாலையில் பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்த 15 வயதிற்குட்பட்ட 23 குழந்தைகள் வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் 22 பேரை துப்பாக்கி முனையில் சிறைபிடித்தான் சுபாஷ் பாத்தம். இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குற்றவாளியை நெருங்க முயற்சி செய்த போது அவனிடம் இருந்த கையெறி குண்டுகளை வீசினான். மேலும் தன்னிடம் 35 கிலோ உள்ள வெடிகுண்டுகள் இருப்பதாகவும் அவன் எச்சரித்தான்.

இதனை அடுத்து போலீசார் அவனிடம் இருந்த குழந்தைகளை பத்திரமாக மீட்க சுமார் 10 மணி நேரம் போராடினர். தேசிய பாதுகாப்புப்படை கமாண்டோக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காட்டு தீயாய் அக்கம் பக்கம் கிராமங்களுக்கு தகவல் பரவ பெரும் கூட்டமாக பொதுமக்களும், குழந்தைகளின் உறவினர்களும் அப்பகுதியில் திரண்டனர். அவன் கோரிக்கை என்ன என்று போலீசார் உள்ளூர் மக்கள் சிலர் மூலமாக குற்றவாளி சுபாஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அச்சமயம் தான் குற்றவழக்கில் தவறாக சேர்க்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக தெரிவித்தான். நிலைமையின் தீவிரத்தை அறிந்த உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் அவனுடன் துப்பாக்கி சண்டை நடத்திய போலீசார் அவனை சுட்டு கொன்று குழந்தைகள் உட்பட அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.