http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_471065700054169.jpg

கிரிக்கெட் ஜெண்டில் மேன் கேம் என நிரூபித்த தருணம்... அனைவரின் பாராட்டை பெற்ற நியூசிலாந்து வீரர்கள்

தென்னாப்பிரிக்காவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை நடந்துவருகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவரில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் மற்ற வீரர்கள் அனைவருமே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துகொண்டிருக்க, மறுமுனையில் 4-ம் நிலையில் களமிறங்கிய கிர்க் மெக்கென்சி மட்டும் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தார். 99 ரன்கள் அடித்த மெக்கென்சிக்கு துரதிர்ஷ்டவசமாக 43-வது ஓவரில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட, அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார். அவரால் நடக்கக்கூட முடியாததால் ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்டார்.

சதத்திற்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், காயம் காரணமாக 99 ரன்னில் களத்தை விட்டு வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுகளை இழந்துவிட்ட பின்னர், கடைசியாக வேறு வழியின்றி மெக்கென்சி களத்திற்கு வந்தார். ஆனால் களத்திற்கு வந்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இன்னிங்ஸ் முடிந்து களத்தை விட்டு வெளியேறும்போது, மெக்கென்சியால் நடக்க முடியவில்லை. நடக்க முடியாமல் வலியுடன் தட்டுத்தடுமாறி நடந்த மெக்கென்சியை, நியூசிலாந்து கேப்டன் டஷ்கோஃப் மற்றும் ஜோய் ஃபீல்டு ஆகிய இருவரும் தூக்கிச்சென்று பவுண்டரி லைனில் விட்டனர்.

நியூசிலாந்து வீரர்களின் இந்த செயல் ரசிகர்களையும் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்களையும் என அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. தோல்வி கண்ட வெஸ்ட்இண்டீஸ் அணி அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.