http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_506832301616669.jpg

இந்தியா உட்பட 30 நாடுகளில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: சர்வதேச அவசரநிலை பிரகடனம்

சிங்கப்பூர்: இந்தியா உட்பட 30 நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘சார்ஸ்’ வைரஸ் போன்று உலகம் முழுவதும் பரவுவதால் சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் சர்வதேச அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் முக்கிய நகரங்களுக்கு, விமானப் பயணிகள் போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்துள்ளன. வைரஸ் பரவுவதற்கு அதிக ஆபத்தில் இருக்கும் முதல் 30 நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

தீவிரமாக பரவியுள்ள நாடுகளின் பட்டியலில், தாய்லாந்து முதலிடத்திலும் அதற்கடுத்த இடங்களில் ஜப்பான் மற்றும் ஹாங்க்காங் உள்ளன. இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொகுத்த பட்டியலில், அமெரிக்காஆறாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 10வது இடத்திலும், இங்கிலாந்து 17வது இடத்திலும், இந்தியா 23வது இடத்திலும் உள்ளன. தாய்லாந்தின் தலைநகரான பாங்காக், கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிர நகரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. லண்டன், நியூயார்க் மற்றும் சிட்னி ஆகியவை இந்த பட்டியலில் இடம் பெற்ற 20 முக்கிய சர்வதேச நகரங்களில் அடங்கும்.

சீனாவில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 7,711 ஆக உயர்ந்துள்ளதால், நாட்டில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்ததாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் நேற்று  தெரிவித்துள்ளது. இதற்கிடையே, உலக சுகாதார அமைப்பின் அவசரக் குழு இன்று மீண்டும் கூடி கொரோனா வைரசின் தீவிரமான பரவல் குறித்து ஆலோசனை நடத்துகிறது. அப்போது, உலகளாவிய அவசரநிலையாக  இருக்கிறதா? என்பதை தீர்மானிக்க உள்ளது. ஜெனீவாவில் நடக்கும் உலக சுகாதார அமைப்பின் இன்றைய அவசர கூட்டத்தில், ‘உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை’ அறிவிக்கப்பட்டுள்ளது.

 ‘சார்ஸ்’ போன்று ‘கொரோனா’

தீவிர சுவாச நோய் எனப்படும் நுரையீரல் அழற்சி நோயை ‘சார்ஸ்’ என்கின்றனர். இந்நோய் நவ. 2002ம் ஆண்டுக்கும் ஜூலை 2003ம் ஆண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில் ஷாங்காங்கில் இருந்து உலகம் முழுவதும் பரவியது. இந்நோயால் 8,422 பேர் பாதிக்கப்பட்டு 916 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சார்ஸ் வைரஸ் ேநாய் உண்டான சில வாரங்களிலேயே 37 நாடுகளுக்கு இந்நோய் பரவியது. இந்நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவரின் சதவீதம் 24 வயதுக்கு குறைந்தவர்களுக்கு 1% ஆகவும், 25 வயதிலிருந்து 44 வயது வரை உள்ளோர் 6% ஆகவும், 45 முதல் 64 வயதுடையோருக்கு 15% ஆகவும் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு 50% க்கும் கூடுதலாகவும் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.