ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
by DINஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பான் சுங்கச்சாவடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்று வரும் துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர், இதில் காவலர் ஒருவர் காயமடைந்தார்.
ஜம்முவை ஸ்ரீநகருடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச்சூடு தொடர்ந்து வருவதால், வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, லாரி மூலம் அங்கு வந்த பயங்கரவாதிகள் போலிஸார் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து போலீஸாரும் திருப்பிச் சுட்டனர். இந்த நிலையில், லாரியில் இருந்து தப்பியோடிய பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே அங்கு துப்பாக்கிச்சூடு தொடர்ந்து வருகிறது.
இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காயமடைந்த காவலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கதுவா, ஹரிநகர் எல்லைப் பகுதியைச் சேர்ந்த புதிய பயங்கரவாதக் குழுவாக இருக்காலம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு வழக்கமாக நடைபெற்ற வாகனச் சோதனையின் போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் ஐஜி முகேஷ் சிங் தெரிவித்தார். இதில் மேலும் 4 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் கூறினார்.
சிஆர்பிஎஃப் மற்றும் ராணுவ வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து அப்பகுதி முழுவதையும் சுற்றிவளைத்துள்ளனர்.