ஓய்வு எப்போது?: ரோஜர் ஃபெடரர் பதில்!
by எழில்மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரரை நேர் செட்களில் வீழ்த்தியுள்ளார் ஜோகோவிச். சிறப்பாக விளையாடி அரையிறுதிச்சுற்றை 7-6 (1), 6-4, 6-3 என நேர் செட்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். காயம் காரணமாக ஃபெடரர் அவதிப்பட்டதால் அவரால் முழு ஈடுபாட்டுடன் விளையாட முடியாமல் போனது.
ஆட்டம் முடிந்த பிறகு ஃபெடரர் பேட்டியளித்ததாவது:
காயம் காரணமாக வெற்றி பெறமுடியாது என நினைத்திருந்தால் விளையாடச் சென்றிருக்க மாட்டேன். இந்தப் போட்டியில் விளையாடிய விதம் மகிழ்வளிக்கிறது. என்னால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என எண்ணுகிறேன். இதற்கு முன்பு சமீபமாக எந்தப் போட்டியிலும் விளையாடாததால் அரையிறுதி வரை முன்னேறியது நல்ல முடிவு.
ஓய்வு குறித்துக் கேட்கிறீர்கள். வருங்காலத்தில் என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது. அதிலும் என் வயதில் வாய்ப்பே இல்லை. நான் நம்பிக்கையுடன் உள்ளேன். என் உடற்தகுதி குறித்து திருப்திகரமாக உள்ளேன். இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. குடும்பச் சூழல் உள்பட இந்த வருடம் எப்படிச் செல்கிறது என்று பார்க்கலாம். பிறகு அதிலிருந்து முடிவெடுக்கலாம். நான் மீண்டும் இங்கு விளையாட வருவேன் என்று கூறியுள்ளார்.