https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/original/IBM_CEO_Arvind_Krishna.jpg

ஐபிஎம் சிஇஓவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா நியமனம்

by

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான அமெரிக்காவைச் சேர்ந்த ஐபிஎம் தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கு சரியான நபரும், ஐபிஎம் நிறுவனத்தை அடுத்தகட்டத்தை நோக்கி நிலைத்தன்மையுடன் வழிநடத்திச் செல்லத் தகுதியான நபர் என்று அரவிந்த் கிருஷ்ணாவை, முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி விர்ஜீனியா ரொமெட்டி (62) புகழாரம் சூட்டினார். இவர் கடந்த 40 ஆண்டுகளாக ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர்.

தற்போது 57 வயதான கிருஷ்ணா, கடந்த 1990இல் ஐபிஎம்மில் சேர்ந்தார். கான்பூரில் உள்ள ஐஐடியில் இளங்கலைப் பட்டமும், அர்பானா-சாம்பேனில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

ஐபிஎம் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டது தொடர்பாக அரவிந்த் கிருஷ்ணா கூறியதாவது,

ஐபிஎம்மின் அடுத்த தலைமைச் செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நிர்வாகம் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். ஐபிஎம் நிறுவனம் திறமையான நபர்களையும், தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இது எங்கள் வாடிக்கையாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்க உதவ ஒன்றிணைந்து செயல்பட முடியும். உலகெங்கிலும் உள்ள ஐபிஎம் ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் உள்ளேன் என்று தெரிவித்தார்.

மைக்ரோஸாஃப்ட் தலைமைச் செயல்க அதிகாரி சத்யா நாதெல்லா, கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மாஸ்டர்கார்டு தலைமைச் செயல் அதிகாரி அஜய் பங்கா, பெப்சிகோவின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி இந்திரா நூயி மற்றும் அடோப் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண் ஆகியோருக்கு அடுத்து உலகளாவிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவியேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எனும் சிறப்பைப் பெற்றார் அரவிந்த் கிருஷ்ணா.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!