சீனாவில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 213 ஆக அதிகரிப்பு
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபெய் மகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து பரவ த்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி வருகின்றது. வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் 132 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மேலும் 81 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 6ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேலும் 1700 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. வைரஸ் தொற்று காரணமாக மொத்தம் 7711 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹூபெய் மாகாண அரசு உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த செவ்வாயன்று பேசிய அதிபர் ஜீ ஜிங்பிங் கூறுகையில், “ கொரோனா வைரஸ் என்னும் “பேய்” கட்டுப்படுத்தப்படும்.
வைரஸ் குறித்த தகவல்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் மற்றும் அரசு வெளிப்படை தன்மையும் நடக்கும்” என்றார். சீனா தேசிய சுகாதார ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவின் 31 மாகாணங்களில் 7711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் நிமோனியா காய்ச்சலால் மொத்தம் 213 பேர் உயிரிழந்துள்ளனர். 1370 பேர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதன் வரை 12,167 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை காய்ச்சலில் இருந்து மீண்ட 124 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.