https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/14/original/supreme1.jpg

நிர்பயா: மூன்றாவது குற்றவாளியின் சீராய்வு மனுவும் தள்ளுபடி

by

நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. வினய் குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோருடன் சேர்த்து இதுவரை மூன்று குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
 பவன் குப்தா மட்டும் இன்னும் சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை. இவர்கள் நால்வருக்கும் பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 இந்நிலையில், அக்ஷய் குமாரின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப்.நாரிமன், ஆர்.பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு தங்களது அறையில் வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து கூறியதாவது:
 மனுதாரரின் சீராய்வு மனுக்களையும், அது தொடர்புடைய ஆவணங்களையும் பரிசீலித்தோம். எங்கள் பார்வையில், அதில் ரூபா அசோக் ஹுரா - அசோக் ஹுரா ஆகியோர் இடையே நடைபெற்ற வழக்கில் இந்த நீதிமன்றம் எடுத்த முடிவில் சுட்டிக்காட்டப்பட்ட அளவீடுகளில் இந்த வழக்கு வரவில்லை. ஆகவே, சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று உத்தரவிட்டனர்.
 மேலும், அக்ஷய் குமாரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்குத் தடை விதிக்கக் கோரிய மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
 அக்ஷய் குமாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடைசி வாய்ப்பாக குடியரசுத் தலைவரிடம் அவர் கருணை மனு அனுப்ப வாய்ப்புள்ளது.
 தூக்கிலிடும் ஊழியர் ஆஜர்: குற்றவாளிகளைத் தூக்கிலிட நியமிக்கப்பட்டுள்ள மீரட் சிறையைச் சேர்ந்த பவன் ஜல்லத் வியாழக்கிழமை திகார் சிறைக்கு வந்தார். இதுகுறித்து சிறைத் துறையினர் கூறுகையில், "பவன் ஜல்லத் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த ஹேங்மேன் ஆவார். இவர் திகார் சிறையில் தங்கியிருந்து, தூக்குக் கயிற்றின் பலத்தை வெள்ளிக்கிழமை பரிசோதிப்பார்' எனத் தெரிவித்தனர்.
 தூக்குத் தண்டனை உத்தரவுக்குத் தடை கோரி முறையீடு: இன்று விசாரணை
 தூக்குத் தண்டனை நிறைவேற்ற பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தரப்பில் தில்லி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 முன்னதாக, உச்சநீதிமன்ற உத்தரவுக்காக இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி ஏ.கே. ஜெயின் வியாழக்கிழமை மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஒத்திவைத்தார். பின்னர், அக்ஷய் குமாரின் சீராய் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு குற்றவாளிகளின் மனுவுக்கு பதிலளிக்கும் படி திகார் சிறை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தார்.
 இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
 
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!