https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/original/delhi.jpg

ஜாமியா மாணவர்கள் பேரணியில் இளைஞர் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

by

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் இருந்து பேரணியாகச் சென்ற மாணவர்கள் மீது இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில் மாணவர் ஒருவர் காயமடைந்தார். காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்த இடத்திலேயே நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் விடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 இதையடுத்து, துப்பாக்கியால் சுட்டவர் தில்லி கௌதம் புத் நகரைச் சேர்ந்த கோபால் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், துப்பாக்கியால் சுட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தில்லி போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக்குக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
 முன்னதாக, மகாத்மா காந்தியின் நினைவு தினமான வியாழக்கிழமை, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜாமியா பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்காட் வரை அமைதிப் பேரணி நடத்த ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்திருந்தது. ஏராளமான மாணவர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு மாணவர் காயமடைந்தார். தொடர்ந்து அந்த நபர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவாறு "சுதந்திரம் வேண்டுபவர்களுக்கு நான் வழங்குகிறேன்' எனக் கூச்சலிட்டுக் கொண்டே சென்றார். இது அனைத்தும், அங்கு கூடியிருந்த போலீஸார், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் முன்னிலையிலேயே நடந்தது. இந்நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், ஜாமியா பல்கலைக்கழகத்தில் முதுகலை இதழியல் படிக்கும் மாணவர் சதாப் ஃபாருக் காயமடைந்தார். சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு கோபால் தனது முகநூலில் நேரலை எச்சரிக்கை விடுத்துள்ளார். "ஷகீன் பாக் போராட்டக்காரர்களே ஓடுங்கள். உங்கள் கதை முடிகிறது. நான் இறந்தால், காவித் துணியில் என்னைப் போர்த்தி, ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் எனது இறுதிச்சடங்கை நடத்துங்கள்' என தனது முகநூலில் அவர் பதிவிட்டுள்ளார்.

https://images.dinamani.com/uploads/user/ckeditor_images/article/2020/1/31/studentt.jpg

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!