சீன பயணிகளை கண்காணிக்க புதிய வகை மென்பொருள்
இலங்கைக்குள் மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சீனாவில் இருந்து வருகை தரும் பயணிகள் புதிய வகை மென்பொருள் சாதனத்தை பயன்படுத்தி கண்காணிக்கப்படுவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளாளர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள சுகாதாரம், மனித நலன் மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் நேற்று (30) இடம்பெற்ற போதே சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.
ICTA நிறுவனத்தால் இந்த மென்பொருள் சாதனம் இரண்டு நாட்களில் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்த அவர், அனைத்து பயணிகளுக்கும் அறிவித்து அவர்கள் தரித்து நிற்கும் இடம் மற்றும் அவர்கள் தொடர்பான சகல தகவல்களையும் பெற்று இந்த மென்பொருளின் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
சீனாவில் இருந்து வருகை தரும் பயணிகள் விசேட நுழைவாயில் ஒன்றின் ஊடாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படுவதாக தெரிவித்த அவர் நோய் அறிகுறியை அடையாளம் காண 14 நாட்கள் செல்லும் எனவும் அதுவரை அவர்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமானம் நிலையம் தவிர்ந்த பலாலி விமான நிலையம் மற்றும் கொழும்பு, காலி, திருகோணமலை போன்ற துறைமுக பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார சேவை ஓரளவு பாதுகாப்பு புலனாய்வு சேவையாக நடைமுறைப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.