http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2019_Dec_05__379589259624482.jpg

மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு இலங்கைத் தமிழர்கள் உள்ளாகவில்லை: மத்தியமைச்சர் ராஜ்நாத்சிங் பேட்டி

டெல்லி: இலங்கைத் தமிழர்கள் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ராஜ்நாத்சிங், அண்டை  நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகும் இந்திய வம்சாவழியினருக்கு குடியுரிமை அளிக்கும் நோக்கிலேயே குடியுரிமை சட்டம் திருத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான்,  பங்களாதேஷ் ஆகியவற்றில் உள்ள சிறுபான்மையினர் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அவர்கள், வேறு எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், அதன் காரணமாகவே அவர்களுக்கு அடைக்களம் கொடுக்கும் நோக்கில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு  வரப்படுவதாகக் குறிப்பிட்டார். பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளும் இஸ்லாமிய நாடுகள் என்பதால்,அங்குள்ள முஸ்லிம்கள் மத ரீதியில் துன்புறுத்தப்பட வாய்ப்பு இல்லை என ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாகவே இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு மட்டுமே இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டத் திருத்தம் வழி செய்யும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். இந்த சட்டத்திருத்தத்தில் இலங்கைத் தமிழர்கள் குறித்து  தெரிவிக்கப்படாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராஜ்நாத் சிங், இலங்கைத் தமிழர்கள் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை என்று குறிப்பிட்டார். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்டதாகவும்  தெரிவித்தார்.

இதற்கிடையே, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். மசோதாவுக்கு அதிமுக கட்சி எம்.பி.க்கள் உட்பட 293 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 82 பேர் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர்.