மருத்துவத் தவறுகளுக்கு செவிலியர்கள்தான் காரணமா?!
நன்றி குங்குமம் டாக்டர்
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி என்ற கிராமத்தில் நடந்த சமீபத்திய சம்பவம் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட ரம்யா என்ற பெண்ணின் வயிற்றில் தையல் போடப்பட்டபோது ஊசி முறிந்து சதையில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபோது, அப்போது பணியில் இருந்த செவிலியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதேபோல் கடந்த 2 மாதங்களில் மட்டும் வெவ்வேறு பகுதியில் வெவ்வேறு நிகழ்வுகளில் ஊசி உடைந்து நோயாளிகளின் உடலினுள் தங்கிய மூன்று, நான்கு சம்பவங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற மருத்துவத் தவறுகளுக்கான காரணங்கள் என்ன? தீர்வுகள் என்ன?மகப்பேறியல் நிபுணரும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளருமான டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் பதிலளிக்கிறார்.
செவிலியர்கள்தான் மருத்துவத் தவறுகளுக்குக் காரணமா?
‘‘இதுபோன்று அசாதாரண நிகழ்வுகள் நடப்பதற்கு வாய்ப்புள்ள 100 காரணிகளில் செவிலியர்களின் கவனக்குறைவு என்பது நூற்றில் ஒன்றுதான். அதாவது ஒரு சதவிகிதம்தான் செவிலியர்கள் மருத்துவத் தவறுகளுக்குக் காரணமாக இருப்பார்கள். செவிலியர்களின் கவனக்குறைவும் ஒரு காரணமாக இருக்கலாமே தவிர, அதுவே முழுக்காரணம் கிடையாது. இதுபோல் அரசின் பல தவறுகளை மறைப்பதற்காக அப்போதைக்கு கையில் கிடைப்பவர்கள் மீது பழி போட்டு அவர்களை தண்டிப்பதில் எந்த நியாயமும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டின் சுகாதாரத்துறை அமைப்பில் எந்தெந்த வேலை யாருடையது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
செவிலியர்களின் வேலையை ஆயாக்களிடமும், வார்ட் பாய்களின் வேலையை செவிலியர்களிடமும், டியூட்டி டாக்டர்களின் வேலையை செவிலியர்களிடமும் என அரசு மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்களிடம் மாறி மாறி வேலை வாங்குகிறார்கள். இதுதான் மருத்துவத் தவறுகளுக்கான முக்கிய காரணம்.’’ பிரசவம் பார்ப்பது, தையல் போடுவது போன்ற பணிகளை செவிலியர்கள் செய்யலாமா?‘‘மருத்துவர்தான் பிரசவம் பார்க்க வேண்டும், செவிலியர் பார்க்கக்கூடாது செவிலியர் தையல் போடக்கூடாது என்றெல்லாம் கட்டாயம் கிடையாது. ஏனெனில் செவிலியர்களும் மருத்துவச்சி(Midwife) பயிற்சியை மூன்றரை ஆண்டுகாலம் எடுத்துக் கொண்டுதான் பணிக்கு வருகிறார்கள்.
மருத்துவ உதவியாளர்களுக்கென்றே தனியாக Paramedical படிப்புகளும் இருக்கின்றன. மருத்துவர்தான் பார்க்க வேண்டும், மருத்துவர்தான் தையல் போட வேண்டும் என்ற முடிவை எடுக்கிறீர்கள் என்றால் மிகவும் நல்லது. முடிவு எடுப்பது அரசாங்கத்தின் உரிமைதான். ஆனால், ஒவ்வொரு மருத்துவமனைக்கும் குறைந்தபட்சம் 6 மருத்துவர்களாவது வேண்டும் என்ற நிலையில் அதற்குத் தகுந்தபடி மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இப்படி அடிப்படையில் மிகப்பெரிய ஓட்டையை வைத்துக் கொண்டு செவிலியர்கள் மீது குற்றம் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்?’’மருத்துவர்கள் பற்றாக்குறை எந்தளவில் இருக்கிறது? ‘‘அரசு சுகாதார மையத்தில் இத்தனை டியூட்டி டாக்டர்கள், இத்தனை செவிலியர்கள், இத்தனை ஆயாக்கள், புறநோயாளிகளுக்கு இத்தனை வார்டு பாய்கள், அட்டெண்டர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அளவுகோல் இருக்கிறது.
மருத்துவர்கள் எவ்வளவு முக்கியமோ அதற்கு இணையாக ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர்கள், செவிலியர்கள், ஆயாக்கள் போன்ற மருத்துவ உதவியாளர்களும் தேவைப்படுகிறார்கள். அதுவும் அந்த மருத்துவமனையில் எத்தனை புற நோயாளிகள் வருகிறார்கள், எத்தனை உள்நோயாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தும் மருத்துவர்களும், மருத்துவ உதவியாளர்களும் நியமிக்கப்பட வேண்டும். மேலும் 10 வருடங்களுக்கு முன்பு எத்தனை பேரை நியமித்தார்களோ அதே எண்ணிக்கையில்தான் தற்போது வரையிலும் இருக்கிறார்கள். இதில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, பணி ஓய்வு பெற்றவர்கள் அல்லது விடுப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை அரசு கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பற்றாக்குறை இருக்கிறது.’’
இதற்கு தீர்வு என்ன?
‘‘ஆண்டுக்கொருமுறை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் எண்ணிக்கையில் இவர்களை நியமிக்க வேண்டும். பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் விடுப்பில் செல்பவர்களுக்கு மாற்றான ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், அரசு இதை பின்பற்றுவதில்லை. இதுபோன்ற சூழலில், அரசு செவிலியர்கள் மீதோ, மருத்துவ உதவியாளர்கள் மீதோ பழி போட்டு தற்காலிக பணிநீக்கம் செய்வது கூடாது.’’’
ஊசிகள் தொடர்ந்து உடைவதற்கு காரணம் என்ன?
‘‘ஒரு சிலர் பருமனாக இருப்பார்கள், சிலர் ஒல்லியாக இருப்பார்கள். ஆனால், எல்லோருக்கும் ஒரே அளவில்தான் ஊசி கொடுக்கிறார்கள். பருமனாக இருப்பவர்களுக்கு சதைப்பகுதி அதிகம் என்பதால், சதையில் போய் ஊசி சிக்கிக்கொண்டு உடைந்து போகும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, பல்வேறு அளவுகளில் ஊசிகள் கொடுக்கப்பட வேண்டும். பிரசவ அறையில், கால்களை அகட்டி வைக்கக்கூடிய ஸ்டாண்டுகள் இருக்க வேண்டும். இது இல்லாவிட்டால் தையல் போடும்போது நோயாளி கால்களை குறுக்கிக் கொள்வார்கள். அதனாலும் ஊசி உடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது தவிர போதிய வெளிச்சம் இருக்க வேண்டும். தற்போது நடந்து வரும் சம்பவங்களால் ஊசிகளின் தரத்தைப் பரிசோதிப்பதும்
அவசியமானதாக மாறி இருக்கிறது.’’அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது?
‘‘ஊசி உடைந்து நோயாளிகளின் உடலில் சிக்கிக் கொண்ட சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வந்ததை ஒட்டி, தமிழ்நாடு சுகாதாரப்பிரிவு அனைத்து நிகழ்வுகளையும் தீர விசாரிக்க அறிவுறுத்தியுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் செயலாளர், அரசு மருத்துவமனைகளுக்கு கொடுக்கும் ஊசிகள் தரத்தையும், இருப்பையும் பரிசோதிக்க, தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேஷனுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏற்கனவே அளிக்கப்பட்டுவரும் பயிற்சிகளுடன் சேர்த்து, அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு பாதுகாப்பான முறையில் ஊசி செலுத்துவது, ஊசிபோடும்போது குழந்தைகளை கவனமாகக் கையாளுவது உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பயிற்சிகளை கொடுக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இப்போதைக்கு இது ஆறுதலான செய்தி!’’
நம் சுகாதாரத்துறை அமைப்பில் எந்தெந்த வேலை யாருடையது என்பது இன்னும் தெளிவுபடுத்தப் படவில்லை.
* உஷா நாராயணன்