http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2019_Dec_05__589779078960419.jpg

சவூதி அரேபியா உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில் கட்டாயமில்லை: சவூதி அரசு

ரியாத்: சவூதி அரேபியா உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள உணவகங்களில் நீடித்து வந்த ஆண்கள்,  பெண்களுக்கான தனித்தனி நுழைவாயில் முறை முடிவுக்கு வந்துள்ளது. இளவரசர் முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அங்கு பெண்களுக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உணவகங்களில் தனித்தனி நுழைவாயில் முறை கட்டாயமில்லை என அந்நாட்டு நகராட்சிகள் மற்றும் ஊரக விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்களில் குடும்பத்துடன் வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழைவாயிலும், தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று இருந்தது.

அதே போல உணவகங்களின் உள்ளேயும், ஆண்கள் மட்டுமே இருக்கும் பகுதியும் பெண்கள் மற்றும் குடும்பமாக வந்த வாடிக்கையாளர்கள் இருக்கும் பகுதியும் திரைச்சீலை கொண்டு பிரிக்கப்பட்டு இருக்கும். எனினும், ஏற்கெனவே இந்த கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறையில் தளர்ந்து வந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பால் இந்த முறை முழுமையாக முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், உணவகங்கள் ஆண் பெண் அடிப்படையில் நுழைவாயில் வைத்திருப்பது கட்டாயம் அல்ல என்றும், அப்படி தனித்தனி நுழைவாயில் வேண்டுமா? என்பதை அந்தந்த உணவகங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது. அதே சமயம் உணவகத்திற்குள்  பிரிக்கப்பட்டுள்ள இருக்கை பகுதிகளும் அகற்றப்படுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.