போபர்ஸ் வழக்கு குறித்த பாஜகவின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிலடி
சென்னை: போபர்ஸ் வழக்கு குறித்த பாஜகவின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிலடி அளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தன் ட்விட்டர் பக்கத்தில் சோனியா காந்தி தைரியம், நம்பிக்கை, இரக்கம், கண்ணியம் மற்றும் கருணை ஆகியவற்றின் மொத்த உருவமாவார் என தெரிவித்தார்.
அவரின் முதன்மையான திட்டங்களான உணவுப் பாதுகாப்புச் சட்டம், 100 நாள் வேலை திட்டம் ஆகியவை கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றியுள்ளன. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசியலில் அதிக காலம் காங்கிரஸ் தலைவராக விளங்குகிறார். எனவே சோனியாகாந்தி பலருக்கும் ஊக்கமளிப்பவர் எனப் பதிவிட்டிருந்தார்.
இதனிடையே தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், நாட்டின் முதல் மிகப்பெரும் ஊழலாம் போபர்ஸ் ஊழல் செய்து தலைக்குனிவை ஏற்படுத்திய காங்கிரஸின் சேவையை மக்கள் புறக்கணித்ததை நினைவு கூரும் நாள் இன்று என பதிவிடப்பட்டிருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் ஜோதிமணி போபர்ஸ் வழக்கில் எவ்வித தவறும் நடக்கவில்லை என்ற நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொண்டு மேல் முறையீடு செய்வதில்லை என்று வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதுகூட தெரியாமல் ஒரு கட்சி என பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார்.