https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/9/original/ramadoss2011.jpg
பாமக நிறுவனர் ராமதாஸ்

அடிப்படை எதிர்பார்ப்பைக் கூட நிறைவேற்றாத தமிழக ஆட்சியாளர்கள்: ராமதாஸ் சாடல்

by

சென்னை: தமிழில் பெயர்ப்பலகைகள் என்ற அடிப்படை எதிர்பார்ப்பைக்  கூட தமிழக ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ் ஆட்சிமொழி சட்டம் உருவாக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில், தமிழ்நாட்டில் இம்மாதம் 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தமிழ் ஆட்சி மொழி வாரம் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மகிழ்ச்சியளிக்கும் அதேநேரத்தில், கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணை 42 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாதது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பு கூட நிறைவேற்றப் படவில்லை என்றால், ஆண்டுதோறும் தமிழ் ஆட்சி மொழி வாரத்தை கொண்டாடுவது அர்த்தமற்றது.

பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்றோ, நேற்றோ எழுந்ததில்லை.  இந்தியா விடுதலை அடைந்த காலத்திலிருந்தே இக்கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அதன்பயனாக 1977-ஆம் ஆண்டு தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற எம்.ஜி.ஆர், அடுத்த 50 நாட்களில், அதாவது ஆகஸ்ட் 8-ஆம் தேதி அனைத்து கடைகளின் பெயர்ப்பலகைகளும் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் வகையில், 1948-ஆம் ஆண்டு பெயர்ப்பலகைகள் தொடர்பாக இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து, 575 எண் கொண்ட அரசாணையை பிறப்பிக்கச் செய்தார்.

அதன்பின்னர் 1983-84ஆம் ஆண்டில் 1541 என்ற எண் கொண்ட அரசாணையை எம்.ஜி.ஆர் அரசும், 1989-90 ஆம் ஆண்டில் 291 என்ற எண் கொண்ட அரசாணையை கலைஞர் அரசும் பிறப்பித்தன.  இந்த 3 அரசாணைகளின் நோக்கமும் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்பது தான். ஆனால், இவற்றில் ஒன்று கூட செயல்படுத்தப்படவில்லை என்பது தான் வேதனையான உண்மையாகும்.

கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதுவதை உறுதி செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 25 ஆண்டுகளில் ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறது.

ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் அந்தந்த மாநில மொழிகளில் தான் எழுதப்பட்டு உள்ளன. அதைத் தான் அந்த மாநில மக்களும், வணிகர்களும் பெருமையாக கருதுகின்றனர். ஆனால், உலகின் மூத்த குடி, உலகின் மூத்த மொழி என்று பெருமை பேசிக் கொள்ளும் தமிழகத்திலோ  தமிழைத் தவிர மற்ற மொழிகளில் கடைகளின் பெயர்ப்பலகைகள் காட்சியளிக்கின்றன. இது அவலம்.

தமிழில் பெயர்ப்பலகைகள் என்ற அடிப்படை எதிர்பார்ப்பு கூட இன்னும் நிறைவேறாததற்கு காரணம்  இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் போதிய அக்கறை காட்டவில்லை என்பது தான். தமிழ்நாட்டில் தமிழில் பெயர்ப்பலகைகளை அமைப்பது தமிழன்னைக்கு நாம் செய்யும் தொண்டு ஆகும். அதைக்கூட  செய்யாமல் நாமெல்லாம் தமிழர்கள் என்று கூறிக் கொள்வதிலோ, ‘‘எங்கும் தமிழ்.... எதிலும் தமிழ்’’ என்று முழக்கமிடுவதிலோ பயனில்லை. எனவே, பெயர்ப்பலகைகளில் தமிழ் என்பது தொடர்பான அரசாணைகளை நடைமுறைப்படுத்த தமிழக அரசு மிகத்தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!