https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/9/original/Siddaramaiah.jpg

கர்நாடக இடைத்தேர்தல் எதிரொலி: சித்தராமையா ராஜிநாமா!

by

கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளதால், அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்தார்.

கர்நாடக மாநிலத்தில் 15 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (திங்கள்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே அம்மாநில பேரவையில் பெரும்பான்மையைப் பெற்றுவிடும். ஆனால், அக்கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்று, மேற்கொண்டு 2 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. எனவே, கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா ஆட்சியைத் தக்கவைத்துள்ளார்.

கர்நாடகாவில் 11 தொகுதிகளில் பாஜக வெற்றி

இந்நிலையில், இதன் எதிரொலியாக காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக சித்தராமையா அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நான் ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். எனது ராஜிநாமா கடிதத்தை சோனியா காந்தியிடம் சமர்ப்பித்துள்ளேன்" என்றார்.

2018 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த 15 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளைக் கைப்பற்றிய நிலையில், இடைத்தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!