http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2019_Dec_05__481640040874482.jpg

கர்நாடக இடைத்தேர்தல் சாட்சி: பாஜக வந்தால் மட்டுமே அரசியல் நிலைத்தன்மை ஏற்படும்...பிரதமர் மோடி உரை

பர்ஹி : காங்கிரஸ் மற்றும் மஜத குறுக்கு வழியில் மீண்டும் ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை என்பதையே கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் காட்டி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்:

கர்நாடகாவில் 2018ம் ஆண்டு சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மஜத, பாஜ, காங்கிரஸ் ஆகிய எந்தக்கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ் ஆதரவுடன் மஜதவை சேர்ந்த குமாரசாமி முதல்வராக பதவி ஏற்றார். 14 மாதங்கள் இந்த கூட்டணி அரசு நீடித்தது. இதன் பின்னர், கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்திருப்பதாக கூறி தங்களின் எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

கர்நாடகா சட்டமன்ற இடைத்தேர்தல்:

இதற்கிடையே, எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. மாறாக 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தார். மேலும், இந்த 17 பேரும் இப்போதுள்ள சட்டப்பேரவை காலம் முடியும்வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவித்தார். ரமேஷ்குமாரின் உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் 17 பேரில், 15 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என உத்தரவிட்டது. இந்நிலையில், காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த 5ம் தேதி 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

பாஜக வெற்றி:

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது. ஆரம்பம் முதலே தபால் வாக்குகள் எண்ணப்பட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜ வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டதில், பாஜ 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர் இரு தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தனர். தற்போது, பாஜக 6 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. 6 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. காஙங்கிரஸ் கட்சி 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. சுயேச்சை வேட்பாளர் 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையுடன் தொடர 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், தற்போது பாஜ வேட்பாளர்கள் 12 தொகுதிகளில் பாஜ வெற்றி பெறும் நிலையில் உள்ளதால்,
முதல்வர் எடியூரப்பாவின் அரசு ஆபத்தில் இருந்து தப்பியது.
 
பிரதமர் மோடி தாக்கு:

இந்நிலையில். ஜார்கண்ட் ஹசாரிபாக் பகுதியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகாவில் மக்கள் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் மற்றும் மஜத பின்வாசல் வழியாக, குறுக்கு வழியில் திருடப் பார்த்தது. மக்கள் அவர்களுக்கு தற்போது சரியான பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர் என்றார். மேலும், பா.ஜ., மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. பாஜக வந்தால் மட்டுமே அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் என மக்கள் நம்புகிறார்கள் என்பது நிரூபனமாகி உள்ளது. பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. கர்நாடக மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.