பண்ருட்டி அருகே ரூ.50 லட்சத்துக்கு ஏலம் போன ஊராட்சி மன்ற தலைவர் பதவி..: துணைத்தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சம்!
கடலூர்: பண்ருட்டி அருகே ரூ.50 லட்சத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் எடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராம பஞ்சாயத்து அமைந்துள்ளது. இந்த பஞ்சாயத்தில் 1,900 ஓட்டுகள் உள்ளன. மொத்தம் 8 வார்டுகள் உள்ள இந்த கிராம பஞ்சாயத்தில், உள்ளாட்சி தேர்தல் அறிவித்த உடனேயே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் என்பவர், தனக்கு தான் தலைவர் பதவியை ஒதுக்க வேண்டும் என ஊர் மக்களிடம் கேட்டுள்ளார். அதையும் மீறி யாராவது போட்டியிட்டால், அவர்களை தாக்குவேன் என அவர் மிரட்டலும் விடுத்துள்ளார். இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் பதிவிக்கான ஏலம், நடுக்குப்பம் பகுதியில் உள்ள கோவிலில் இன்று நடைபெற்றது.
அந்த ஏலத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமும், துணைத்தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் தருவதாக அதிமுகவை சக்திவேல், மற்றும் தேமுதிகவை சேர்ந்த முருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட ஊர்மக்கள், ஏற்கனவே பஞ்சாயத்து தலைவராக இருந்த சக்திவேல் இந்த முறையும் பஞ்சாயத்து தலைவராக தொடர ஒருமனதாக தீர்மானம் செய்துள்ளனர். இதையடுத்து, ஏலத்தொகையை டிசம்பர் 15ம் தேதிக்குள் செலுத்த இருவருக்கும் அவகாசம் விடுக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகள் ஏலம் விடப்பட்டதால் யாரும் எதிர்த்து போட்டியிட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனநாயக ரீதியாக தலைவரை தேர்ந்தெடுக்காமல் பணம் கொடுத்து பதவியை ஏலம் எடுத்துள்ளது பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.