கருப்பு நிறத்தால் வெளிநாட்டு வெங்காயத்தை வாங்கத் தயங்கும் மக்கள்
by DINதிருச்சி: வெளிநாட்டில் இருந்து 11 ஆயிரம் டன் வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்திருந்தது. இதில் சுமார் 30 டன் வெங்காயம் திருச்சி வந்தடைந்தது.
சனிக்கிழமை காலை துருக்கியில் இருந்து 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதியான நிலையில், ஒரு மணி நேரத்தில் அனைத்து வெங்காயமும் விற்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அங்கிருந்து திருச்சிக்கு 30 டன் வெங்காயம் இன்று வந்தடைந்தது.
ஆனால், வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் வெங்காயத்தின் நிறம் கருப்பாக இருப்பதால், மக்கள் அதனை வாங்க தயக்கம் காட்டுவதாக வியாபாரிகள் கூறுகிறார்கள். பார்க்க கருப்பாக இருப்பதால், அதனை வாங்கி உண்டால் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுமோ என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆனால், வெங்காயம் பார்க்க நிறம் மட்டும்தான் கருப்பாக இருக்கிறது. ஆனால், நம்ம ஊர் வெங்காயம் போலவேதான் இதுவும் என்று வணிகர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.
உள்நாட்டு சந்தைகளில் உயா்ந்து வரும் வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, உள்நாட்டில் வெங்காயத்தின் அளிப்பை அதிகரித்து விலை உயா்வை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, எகிப்து நாட்டிலிருந்து 6,090 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்து கொள்ளும் வகையில் எம்எம்டிசி நிறுவனம் ஏற்கெனவே ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டிருந்தது. எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மும்பையில் உள்ள ஜவாஹா்லால் நேரு துறைமுகத்தை இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த நிலையில், துருக்கியிலிருந்து 11 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அந்நிறுவனம் இரண்டாவது முறையாக ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தது.
நாட்டின் பல்வேறு நகரங்களில் வெங்காயத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டு அதன் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து கிலோ ரூ.75-120 வரையில் விற்பனையாகிறது. எனவே, உள்நாட்டு சந்தைகளில் வெங்காயத்துக்கான தட்டுப்பாட்டைப் போக்கி அதன் விலையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் வெளிநாடுகளிலிருந்து 1.2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்து கொள்ள அமைச்சரவை குழு கடந்த மாதம் அனுமதி அளித்தது. மேலும், வெங்காயத்தின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் அமைச்சா்கள் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.