https://s3.amazonaws.com/adaderanatamil/1575886614-Parliament-2.jpg

அரசியலமைப்பு சபை உறுப்பினர்களில் மாற்றம்

அரசியலமைப்புச் சபைக்கு மேலும் சில உறுப்பினர்களை புதிதாக நியமிக்க வேண்டும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய அரசியலமைப்புச் சபைக்கு ஜனாதிபதியால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெயரிடப்பட வேண்டும்.

பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மாறியுள்ளதால் அவர்களின் பரிந்துரையின் கீழ் 05 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட வேண்டும்.

அவர்களில் இருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய அரசியல் கட்சியிலோ அல்லது சுயாதீன அணி அல்லாத பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றைய அரசியல் கட்சிகளின் பெரும்பான்மை இணக்கத்துடன் மேலுமொரு பாராளுமன்ற உறுப்பினர் அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்பட வேண்டும்.

பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அதிகாரத்தின் கீழ் அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் உள்ள நிலையில் அதன் தவிசாளராக சபாநாயகர் காணப்படுகிறார்.

இதேவேளை, அரசியலமைப்பு சபை எதிர்வரும் வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

அதற்கு முன்னர் குறித்த உறுப்பினர்கள் பெயரிடப்படக்கூடும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.