இங்கிருந்த என் வீட்டைக் காணோம்!
நன்றி குங்குமம் முத்தாரம்
‘கிணற்றைக் காணோம்’ என வடிவேலு அலப்பறை செய்வாரே... அப்படி இது உடான்ஸ் மேட்டர் இல்லை! நிஜமாகவே திருடு போய்விட்ட ஒரு வீட்டைப் பற்றியதுதான்! அழகான கலிபோர்னியா மாகாணத்தில் அமைதியாக அமர்ந்திருக்கிறது சாக்ரமெண்டோ நகரம். மக்கள்தொகை குறைவு என்பதால் நெருக்கடி இல்லாத வாழ்க்கை.
அங்கொன்றும் இங்கொன்றுமாக அழகான நகரும் மர வீடுகள். பயணம், கலைகள் என்று நாடோடி போல் வாழ்கிற அமெரிக்க இளசுகளின் மத்தியில் ‘நகரும் வீடுகள்’தான் லேட்டஸ்ட் டிரெண்ட்.நகரும் ஒரு வீட்டைக் குறைந்த செலவில் கட்டுவதுதான் இசை யமைப்பாளரும், பாடகருமான மெலிண்டா கிர்ச்டன் என்ற இளம்பெண்ணின் பெருங்கனவு.
மூன்று ஆண்டுகளாக, தான் சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு சமீபத்தில் 13 அடி உயரமும், 33 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்ட ஒரு நகரும் வீட்டைக் கட்டி முடித்தார். இதற்கே 50 ஆயிரம் டாலர் வரை செலவாகியிருக்கிறது. வீட்டை எங்கு வேண்டுமானாலும் நகர்த்திச் செல்ல வசதி யாக அடியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
தான் வாடகைக்குக் குடியிருந்த அபார்ட்மென்ட்டுக்கு பக்கத்தில் உள்ள சாலையின் ஓரத்தில், ஒரு வாகனத்தைப் போல அந்த வீட்டை பார்க் செய்திருந்தார் மெலிண்டா. சீக்கிரமே அந்த வீட்டுக்குக் குடி போகத் திட்டமிட்டிருந்தார். ‘இனி வாடகை செலவு மிச்சம், அந்தப் பணத்தை இசைப் பயணத்துக்குச் செலவு செய்யலாம்’ என்ற கனவுகளோடு உறங்கப் போனார்.
அடுத்த நாள் காலையில் எழுந்து தன்னுடைய வீடு இருக்கும் சாலையில் நடைப் பயிற்சி போகும்போது அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீட்டை யாரோ திருடிப் போய்விட்டார்கள். ‘‘ஐயோ... என் வீட்டைக் காணோம்!’’ என்று கூச்சலிட்ட மெலிண்டா, போலீஸில் புகார் செய்திருக்கிறார்.
இந்த மாதிரியான விசித்திர வழக்கு அமெரிக்காவில் இதுதான் முதல்முறை. சுமார் இரண்டே முக்கால் டன் எடையுள்ள வீட்டை எப்படித் திருடிக்கொண்டு போயிருப்பார்கள் என்ற ஆச்சர்யத்துடன் தேடுதலில் இறங்கியது போலீஸ். வீட்டைத் திருடிய களவாணிகள்,அதை ஒரு கட்டத்துக்கு மேல் கொண்டு செல்ல முடியாமல், ஒரு ஷாப்பிங் சென்டர் முன்பாக நிறுத்திவிட்டு எஸ்கேப் ஆகியிருந்தனர்.
அந்த வழியாகச் சென்ற நண்பர் இதைப் பார்த்துவிட்டு போனில் சொல்ல, வீடு கிடைத்த சந்தோஷத்தில் தனக்குப் பிடித்த பாடலைப் பாட ஆரம்பித்துவிட்டார் மெலிண்டா. இப்போது நகரும் வீடுகளில் குடியிருக்கும் அமெரிக்கர்கள் உஷாராகிவிட்டனர்!