எவ்வளவு பெரிய மைதானத்திலும் என்னால் சிக்ஸர் அடிக்க முடியும்: ஷிவம் டுபே நம்பிக்கை
by எழில்இரண்டாவது டி20 ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்தியா 170/7 ரன்களைக் குவித்தது. 1.3 ஓவா்கள் மீதமிருந்த நிலையில் 18.3 ஓவா்களில் மே.இ.தீவுகள் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரா் லென்டில் சிம்மன்ஸ் நிலைத்து ஆடி, தலா 4 சிக்ஸா், பவுண்டரியுடன் 45 பந்துகளில் 67 ரன்களை விளாசினாா். 8 விக்கெட் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் வென்ற நிலையில் தற்போது தொடரில் 1-1 என சமநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் விரைவாக ரன்கள் எடுக்கத் திணறியபோது இளம் வீரர் ஷிவம் டுபே மட்டுமே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்து இந்திய அணி கெளரவமான ஸ்கோரை எடுக்க உதவினார்.
ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஷிவம் டுபே கூறியதாவது:
இந்த மைதானம் பெரிதானது. ஆனால் எவ்வளவு பெரிய மைதானத்திலும் சிக்ஸர் அடிக்கமுடியும். இன்று கூட நீங்கள் அதைப் பார்த்திருக்கலாம். அதுதான் என்னுடைய திறமை.
3-ம் நிலை வீரராக விளையாட எனக்குக் கிடைத்த வாய்ப்பு மிகவும் முக்கியமானது. சர்வதேச டி20 ஆட்டம் என்பதால் ஆரம்பத்தில் அழுத்தம் இருந்தது. அதன்பிறகு ரோஹித் சர்மா எனக்கு நன்கு ஊக்கமளித்தார். நிதானமாக இரு. உன் பலத்தை நம்பு என்று நம்பிக்கையான வார்த்தைகளைப் பேசினார். ஒரு மூத்த வீரரிடமிருந்து அதுபோன்ற ஊக்கத்தையே நான் எதிர்பார்த்தேன். ஒரு சிக்ஸர் அடித்த பிறகு நன்கு விளையாட ஆரம்பித்தேன் என்றார்.