6 கேமரா போன்!
நன்றி குங்குமம் முத்தாரம்
போன நிமிடத்து டெக்னாலஜி இந்த நிமிடத்தில் காலாவதியாகிப் போகிற காலம். அதுவும் ஸ்மார்ட்போனில் நாளுக்கு ஒரு அப்டேட் வந்து நம்மை கலங்கடிக்கிறது. இதுபோக ஒரு நிறுவனம் தனது புது மாடலை சந்தையில் அறிமுகப் படுத்தும் முன்பே அந்த போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்பது இணையத்தில் கசிந்து விடுகிறது.
வாடிக்கையாளர்களின் எதிர் பார்ப்பைக் கிளற நிறுவனங்களே இதைச் செய்கின்றன என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்தாலும், எந்த நிறுவனமும் இதை ஏற்றுக்கொள்வதில்லை. இப்படியான ஒரு சம்பவம் தான் இது.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ‘சாம்சங்’ நிறுவனம் ‘கேலக்ஸி எஸ் 10’ சீரிஸை அறிமுகப்படுத்தியது. இதன் அப்டேட் வெர்ஷனாக ‘எஸ் 11’ சீரிஸை அடுத்த வருடம் சந்தையில் இறக்கவுள்ளதாக தகவல் கசிந்திருக்கிறது. ‘எஸ் 11’, ‘எஸ் 11 பிளஸ்’, ‘எஸ் 11இ’ என்று மூன்று மாடல்களில் இந்த போன் கிடைக்கும்.
இப்போது எஸ் 11 பிளஸ்ஸில் உள்ள அம்சங்கள் மட்டுமே வெளியாகி யிருக்கின்றன. 6.9 இன்ச்சில் டைனமிக் AMOLED டிஸ்பிளே. இது டேப்லெட்டா அல்லது ஸ்மார்ட்போனா என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு டிஸ்பிளே கெத்து காட்டுகிறது.
108 எம்பியில் முதன்மையான கேமரா உட்பட ஐந்து பின்புற கேமராக்கள், 8k தரத்தில் வீடியோவைப் பதிவு செய்யும் திறன், குவாட் ஹெச்டி பிளஸ் ரெசல்யூசன், இதுபோக செல்ஃபிக்கு தனியாக முன்பக்கத்தில் ஒரு கேமரா, மெலிதான வடிவமைப்பு, ஃபிங்கர் பிரின்ட் சென்சார் என அடுத்த தலைமுறையை மனதில் வைத்து வடிவமைத்திருக்கிறார்கள். ஆனால், இந்தத் தகவல்களை உறுதி செய்யவில்லை ‘சாம்சங்’.