சென்னை, கோவை நகரங்கள் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை...பீகார், உத்தரப்பிரதேசம் படுமோசம்: ஆய்வில் தகவல்
புதுடெல்லி: சென்னை, கோவை உள்ளிட்ட தமிழக நகரங்கள் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வரும் நிலையில், அதுபற்றி இந்தியாவில் உள்ள பெரிய நகரங்களில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில், சென்னை, கோவையை பொறுத்தவரை கொலை, சொத்து பிரச்சனை, தாழ்த்தப்பட்டோர் மீதான அடக்குமுறை, வன்முறைகள் குறைவாகவே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரங்களாக இவை விளங்குவதாகவும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. மாறாக, பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேச மாநிலங்களில் அதிகப்படியான குற்றங்கள் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியை பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு 1,050 என்ற வீதத்தில் குற்றங்கள் நடப்பதாகவும், பட்னாவில் 1,712 என்ற வீதத்தில் குற்றங்கள் நடக்கிறது என்றும் அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. டெல்லியை போல பெங்களூரு நகரமும் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்தூர் நகரம் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தல் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது.