http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2019_Dec_05__600017726421357.jpg

திண்டுக்கல் சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு வெங்காயம்: படிப்படியாக விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் சந்தைக்கு வெளிநாட்டு வெங்காயத்தின் வரத்து அதிகரித்திருப்பதால் வரக்கூடிய நாட்களில் வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திண்டுக்கல்லில் வெங்காயத்திற்கெனவே தனி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வரக்கூடிய வெங்காயங்கள் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொடர் மழை பெய்ததன் காரணமாகவே வெங்காயத்தின் வரத்து குறைய ஆரம்பித்தது. இதனால் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதன் உச்சகட்ட விலையாக பெரிய வெங்காயம் 160 முதல் 180 வரை விற்பனை செய்யப்பட்டுவந்தது. மேலும் விலையேற்றம் காரணமாக பொதுமக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் எகிப்து, துருக்கி, நைஜீரியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் திண்டுக்கல் சந்தைக்கு வந்து சேர்ந்தது. கிட்டத்தட்ட 25 லாரிகளில் மொத்தம் 150 டன் வெங்காயம்  திண்டுக்கல் சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வகை வெங்காயமானது அடர்ந்த சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மராட்டியத்தில் இருந்து 100 டன் வெங்காயம் திண்டுக்கல் சந்தைக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து மராட்டியத்தில் இருந்து வந்துள்ள வெங்காயம் கிலோ 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் சந்தைக்கு வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் படிப்படியாக விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.