இருக்கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் எந்த ஊரில் எந்த தேதியில் தேர்தல் என்ற அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் புதிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு தொடர்பான அறிவிப்பாணையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் அதில் முதலாவதாக நடைபெறும் இடங்கள் மற்றும் இரண்டாவதாக நடைபெறும் இடங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
முதல் கட்டத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 2546 ஊராட்சி ஒன்றிய வார்டு பதவி இடங்களுக்கும், 4700 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 37,730 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு டிசம்பர் 27ம் தேதி முதல்கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிடங்கள் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமானது தெரிவித்திருந்தது.
இந்த முதல் கட்டத்தில் நடைபெறக்கூடிய 156 ஊராட்சி ஒன்றியங்கள் என்ன என்பது குறித்த அறிவிப்பாணையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதேபோன்று இரண்டாம் கட்டத்தில் நடைபெறக்கூடிய 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட இடங்களில் எந்தெந்த இடங்கள் என்பதை மாவட்ட வாரியாக பிரித்து அறிவிப்பாணையானது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பாணையில் விரிவாக மாவட்டங்களில் உள்ளே இருக்கக்கூடிய ஊராட்சி ஒன்றியங்கள் எவை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் பாதி இடங்களில் 27-லும், எஞ்சிய இடங்களுக்கு 30ம் தேதியும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. எந்த ஊரில் எந்த தேதியில் தேர்தல் என்பதை உள்ளாட்சி தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. ஒரு மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்கள் இருந்தால் 3க்கு டிசம்பர் 27ம் தேதியிலும், எஞ்சிய மூன்றுக்கு டிசம்பர் 30ம் தேதியிலும் வாக்குப்பதிவு நடைபெறும்.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, திருமானூர் ஒன்றியங்களுக்கு டிசம்பர் 27ம் தேதி தேர்தல் நடைபெறும். அதே அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், தா.பழுவூர் ஒன்றியங்களுக்கு டிசம்பர் 30ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலானது 27ம் தேதி காலை 7 மணி முதல் மலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதனைப்போலவே ஜனவரி 2ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஜனவரி 4ம் தேதி முடிவுக்கு வரும் என்ற அறிவிப்பை அறிவிப்பாணையில் குறிப்பிட்டு, 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாகவும், 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் மாவட்ட ரீதியாக விரிவான பட்டியலை தமிழ்நாடு தேர்தல் ஆணையமானது வெளியிட்டுள்ளது. மேலும் இது குறித்த முழுவிவரமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒட்டப்படும் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.