http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2019_Dec_05__638363063335419.jpg

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா, தென்மாவட்டங்கள் மற்றும் கட லோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் நல்ல மழைபெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாகவே 12 சதவீதம் வடகிழக்கு பருவ மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு தென்கிழக்கே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் நாளை இடியுடன் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதளில் அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் நிலவும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி எந்த பகுதிகளிலும் மழை பெய்யவில்லை என சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.