தேவைப்படும்போது தூக்கிலிடும் நபர் பெறப்படுவார்: திகார் சிறை நிர்வாகம்
by DINநிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட எனக்கு ஊதியம் கூட வேண்டாம் என ஷிம்லாவைச் சேர்ந்த ரவி குமார் என்பவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த-க்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2012-இல் தெற்கு தில்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி நிர்பயா கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, சிங்கப்பூர் மருத்துவமனை வரை சென்றும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ராம் சிங், மகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்தர் தாக்கூர் மற்றும் 16 வயது சிறுவன் ஒருவனையும் தில்லி போலீஸார் கைது செய்தனர். அதில், சிறுவனுக்கு சிறார் நீதி சட்டப்படி அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மற்ற 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதை தில்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியன உறுதி செய்தது.
தூக்கு தண்டனையை நிறைவேற்ற தில்லி திகார் சிறையில் ஆள் இல்லாத காரணத்தால், தண்டனை உறுதி செய்யப்பட்டும் குற்றவாளிகள் தூக்கிலிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தேவைப்படும் போது தூக்கிலிடும் நபர் வேறு மாநிலத்தில் உள்ள வேறு ஏதேனும் சிறையில் இருந்து பெறப்படுவார். நிர்பயா வழக்கு குற்றவாளிகள் அனைவரும் திகார் சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர் என திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நிர்பயா குற்றவாளிகளுக்கு தீர்ப்பளிக்கப்பட்டு 7 வருடங்கள் கடந்து விட்டன. ஆனால், அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படவில்லை. தூக்கிலிடும் பணிக்கு திகார் சிறையில் யாரும் இல்லை என்று கேள்விப்பட்டேன். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட எனக்கு ஊதியம் கூட வேண்டாம் என ஷிம்லாவைச் சேர்ந்த ரவி குமார் என்பவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த-க்கு கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக, ராமநாதபுரம் மாவட்ட காவல் பணியிடை பயிற்சி மையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் சுபாஷ் சீனிவாசன் (42),
நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 பேரை தூக்கிலிடத் திகார் சிறையில் ஆள் இல்லை என்பதால், தண்டனை தள்ளிப்போவதாக செய்திகள் வருகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அந்தப் பணியை செய்ய நான் விரும்புகிறேன் என்று திகார் சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.