https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/1/original/stalinfin1.jpg
திமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்)

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பிற்குத் தடை கோரி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

by

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று திமுக கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், இடஒதுக்கீடு, வார்டு மறுவரையறைகள் செய்த பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிா்த்து இதர மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடத்தலாம் என தீா்ப்பளித்தது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்த மாநில தோ்தல் ஆணையம், புதிய தோ்தல் அறிவிப்பை சனிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை (டிச. 9) தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, திமுக உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. 'உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளபடி, இட ஒதுக்கீடு, வார்டு வரையறை உள்ளிட்ட பணிகளை மாநில அரசு முறையாக செய்யவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மாநில அரசு கடைபிடிக்கவில்லை. இதனால் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்' என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

திமுகவின் இந்த மனுவை நாளை மறுநாள் விசாரணைக்கு எடுக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், திமுக தேர்தலுக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது தேர்தல் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!